சிங்கப்பூரில் இருந்து வந்தவர் தனிமைப்படுத்தப்பட்டு உயிரிழந்ததால் அவரது மனைவி கண்ணீர் மல்க குற்றச்சாட்டு..!
சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்து நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்நிலை சரியில்லாத அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரது மனைவி கண்ணீர் மல்க குற்றம்சாட்டியுள்ளார்.
சிங்கப்பூரில் மேஸ்திரியாக பணியாற்றிய கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த சுந்தரவேல் கொரொனா பொது முடக்கத்தால் தாயகம் திரும்பியுள்ளார். கடந்த 25ஆம் தேதி விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டு தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டார். ஆனால் விடுதி அறையிலேயே அவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
தனியார் நட்சத்திர விடுதியிலிருந்த சுந்தரவேல் கடந்த இரண்டு நாட்களாக தொலைபேசியை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி வலைதளத்தில் புதிய விடுதி ஒன்றை தொடர்பு கொண்டுள்ளார் அதன்பிறகே ஊழியர்கள் சுந்தரவேல் அறையை சோதனையிட்ட போது அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது.
சுந்தரவேலின் உடலை கைப்பற்றிய தேனாம்பேட்டை காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இறந்த சுந்தர வேலுக்கு கொரொனா தொற்று இல்லை என்றும் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உடல்நிலை சரியில்லாத அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என அவரது மனைவி குற்றம்சாட்டியுள்ளார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட சுந்தர வேலுவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.






