12ஆம் தேதி வரை வெளுக்கப்போகுது கனமழை..!
தமிழ்நாட்டில் 12ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் உட்பட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இதனால், நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
இதே போன்று, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விருதுநகர், ராமநாதபுரம் , திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.





