--- --:--:-- --

சிவன் சொத்து குலநாசம்! அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் நந்தவன நிலம் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகிறதா? கொதிக்கும் ஆன்மீக அன்பர்கள்!

ddsf

வரலாற்றுச் சிறப்பும் ஆன்மீகப் பெருமையும் மிக்க அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நந்தவன நிலம், மீண்டும் தனியார் கரங்களுக்குச் செல்ல அரசுத் துறை அதிகாரிகளே வழியமைத்துக் கொடுக்கிறார்களா என்ற பலத்த சந்தேகமும், கொந்தளிப்பும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நந்தவன நிலத்திற்கு நேர்ந்த சோதனை!

 

திருப்பூர் மாவட்டம், அவிநாசி கிராமத்தில் உள்ள க.ச.எண். 330 மற்றும் 331/1A1 ஆகிய புல எண்களில் அமைந்துள்ள 4.30 ஏக்கர் நிலமானது, ஆதிகாலம் தொட்டே ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசியப்பர் திருக்கோவிலின் நந்தவனத்திற்காக ஒதுக்கப்பட்ட புனிதமான நிலமாகும். ஆனால், இந்த நிலத்தில் வெறும் புதர்களும், சீமைக் கருவேல மரங்களும் மண்டி, ஒரு காடு போலவே காட்சியளிக்கிறது. கோவில் சட்டவிதிகளின்படி, இந்த நந்தவனத்தில் பல வகையான பூச்செடிகள், மலர் மரங்கள் வளர்க்கப்பட்டு, அதிலிருந்து வரும் புதிய மலர்களைக் கொண்டு தான் இறைவனுக்கு அன்றாடப் பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்பது ஐதீகம்.

 

ஆனால், இந்த 4.30 ஏக்கர் நிலத்தை “காடாம்பாடி ஐந்நூற்று வகை செட்டிமார் தர்ம பரிபாலன சபை”க்கு பாத்தியப்பட்டது எனக்கூறி, தனியாருக்கு அளவீடு செய்து தர நில அளவை பதிவேடுகள் துறை மூலம் அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீட்கப்பட்ட நிலத்திற்கு மீண்டும் ஆபத்தா?

 

ஏற்கனவே, ஸ்ரீகருணாம்பிகை மண்டபம் மற்றும் அதைச் சார்ந்த கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் இருந்தபோது, சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான சத்தியமூர்த்தி சட்டப் போராட்டத்தினாலும், தொடர் செய்திகளினாலும் ஆக்கிரமிப்புகள் அம்பலப்படுத்தப்பட்டு, கோவில் சொத்துக்கள் மீட்டெடுக்கப்பட்டன.
நீதிமன்ற தலையீட்டிற்குப் பிறகும், மீண்டும் அதே நிலத்தை தனியார் அமைப்பிற்குத் தாரை வார்க்கும் வகையில், அரசு நில அளவைத் துறை சார்பில், கூட்டுப் புலத் தணிக்கை நடத்தத் துணிந்தது ஏன்? என்று கேள்வி எழுந்துள்ளது.

 

நீதிமன்ற உத்தரவை மீறும் முயற்சி

 

இதுகுறித்து வழக்கறிஞர் சத்தியமூர்த்தி கூறுகையில், க.ச.எண்கள் 93, 94/4 மற்றும் 330, 331 ஆகியவை அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான நந்தவனச் சொத்துக்கள் ஆகும். அரசு பதிவேடுகளைத் திருத்தி அனுபவித்து வந்த தனியார் தரப்பிற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, திருக்கோவிலுக்குச் சாதகமாகத் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறைச் சட்டப்பிரிவு 78-ன் கீழ், சம்பந்தப்பட்ட தனியார் தரப்பினர் ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என முறைப்படி அறிவிக்கப்பட்டு, அன்றைய சார் ஆட்சியர் முருகேசன் மற்றும் வருவாய்த்துறையினரால் அளவிடப்பட்டு நிலங்கள் கோவில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. இச்சொத்துக்கள் தொடர்பாகத் திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தில் வழக்கு (OA.19/2024) நிலுவையில் இருந்து வருகிறது.

 

சர்வே செய்யக் கோரும் தனியார் தரப்பிடம் சொத்தின் உரிமைக்கான பட்டாவோ, பத்திரங்களோ அல்லது எவ்வித சட்டப்பூர்வ ஆவணங்களோ கிடையாது. நீதிமன்றத் தீர்ப்பையும், அறநிலையத்துறை நடவடிக்கையையும் மீறி சட்டவிரோதமாக மீண்டும் சர்வே செய்ய முற்பட்டால் அப்பகுதியில் கடுமையான சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ள வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, இந்த சர்வே நடவடிக்கைக்குத் தனது பலத்த ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்.

 

எழும் காரசாரமான கேள்விகள்;

 

* கோவில் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறையும், வருவாய்த்துறையும் இந்த நில அளவை நடவடிக்கையின் போது மௌனம் சாதிப்பது ஏன்?

* பல தலைமுறைகளாகக் கோவிலின் நந்தவனமாக இருக்கும் நிலத்திற்குத் தனியார் எப்படி உரிமை கோர முடியும்?

* இந்து சமய அறநிலையத்துறைச் சட்டப்படி கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கோ அல்லது தனியார் அமைப்புகளுக்கோ பட்டா மாற்றவோ, அளந்து கொடுக்கவோ முகாந்திரம் உள்ளதா?

 

சிவன் சொத்து கோவிலுக்கே வேண்டும்!

 

“சிவன் சொத்து குலநாசம்” என்பதற்கேற்ப, இறையடியார்களின் நம்பிக்கையையும் கோவில் சொத்துக்களையும் சுரண்ட நினைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அறநிலையத்துறையும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு, இந்த நில அளவை நடவடிக்கையை ரத்து செய்வதோடு, 4.30 ஏக்கர் நந்தவன நிலம் முழுமையாக அவிநாசியப்பர் திருக்கோவிலுக்கே சொந்தம் என்பதை முறைப்படி உறுதி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒரே கோரிக்கையாகும்.

 

கோவில் சொத்தைக் காக்க நமது “குற்றம் குற்றமே” இதழின் குரலும் என்றும் ஓங்கி ஒலிக்கும்!

செய்திப் பிரிவு
📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon