தேனியில் இன்று மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமல்!
தேனி மாவட்டத்தில் கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தேனி, போடிநாயக்கனூர், சின்னமனூர், கம்பம் ஆகிய நகராட்சிகளில் இன்று மாலை 6 மணி முதல் மாவட்ட ஆட்சியர் பல்லவி முழு ஊரடங்கை அமல் படுத்தியுள்ளார். இந்த ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகளுக்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி பழங்கள், பால் மற்றும் குடிநீர் சமையல் எரிவாயு, காய்கறிகள், மளிகை சாமான்கள் மற்றும் பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள், மருந்து பொருட்கள், மருத்துவ பரிசோதனை மையங்கள், அவசர ஊர்தி, கட்டுமான பொருட்கள் விற்பனை வங்கிகள் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ காரணங்களுக்காக மட்டும் ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசு அலுவலகங்கள், பொது வினியோக கடைகள், இறைச்சி கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றுக்கு நேர கட்டுப்பாட்டுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் டீ கடைகள், பேக்கரிகள், நகை கடைகள், ஜவுளிக்கடைகள், பெட்டி கடைகள், காலணி விற்பனை செய்யும் கடைகள், பேன்ஸி ஸ்டோர், மொபைல் மற்றும் பழுது நீக்கும் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள் தளர்வின்றி நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அவசியத் தேவைக்காக வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளை பொறுத்தவரை தேனி மாவட்டத்தில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாது என்றும் பழனி மற்றும் திண்டுக்கல் வழித்தடங்களில் 50 விழுக்காடு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.






