தவெக எம்.எல்.ஏ.க்கள் பலரிடம் ரூ. 50 கோடி வரை திமுக பேரம்..!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் கட்சி மாறச் சொல்லி பேரம் பேசியதாக மூன்று பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், இருவருக்கு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் நெருக்கமான தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. முன்னதாக தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடைபெற்றுவருவதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “சென்னை காவல்துறை மூலம் பத்திரிகை செய்தி வெளியாகி உள்ளது. செந்தில் பாலாஜி, ஸ்டாலின், உதயநிதி உத்தரவில் 50 கோடி வரை தருவதாகக் கூறி எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேசி உள்ளனர். குதிரை பேரத்தை 40 நாளாக எங்கள் உறுப்பினர்களிடம் பேசி வருகின்றனர். யார் யாரிடம் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் எனப் பேசி உள்ளனர்.
கேவலமான கீழ்த்தரமான வேலையை ஸ்டாலின், உதயநிதி செய்கின்றனர். சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப் போவதாகவும் அதை ஆதரிக்கக் கோரியும் குதிரை பேரம் பேசியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியும், திமுகவினரோடு சேர்ந்துள்ளார். பல எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்து உள்ளனர். சட்டப் பூர்வமாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாளை தேர்தல் வந்தாலும் நாங்கள் தான் ஜெயிப்போம். திமுகவில் ஒரு முதலமைச்சர் வேட்பாளர் தோற்றுப் போய்விட்டார். ஸ்டாலின் அரசியலை விட்டு விலகி விட வேண்டும்.
கைது நடந்தவுடன் அதை சமாளிக்க ஆளுநருக்கு கடிதம் எழுதி கொண்டிருக்கின்றனர். நாங்கள் யாரிடமும் குதிரை பேரம் பேசவில்லை. 120 உறுப்பினர் ஆதரவு எங்களுக்கு உள்ளது. அதிமுகவில் இனி யாருக்கும் அரசியல் எதிர்காலம் இல்லை. வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டு எந்த வேலையும் செய்யாமல் மகன் அரசியலில் எதுவும் செய்ய மாட்டார் என குறுக்கு புத்தியோடு செயல்பட்டு வருகிறார். அரசியல்வாதியாக கூட பொதுவெளியில் இல்லை. அவர் துபாயில் இருக்கிறார் போய் ஒரு வாரம் ஆகிறது.
முதலில் உங்கள் மகனை ட்ரைனிங் பண்ணும் வேலையை செய்யுங்கள். கடைசி வரை உங்க பேரைச் சொல்லி ஸ்டாலின் தலைமையிலான அரசு எனச் சொல்லி இருக்கிறாரா? திராவிட மாடல் அரசு என்று தான் சொல்லுவார். அவருக்கு தைரியம் கடைசி வரை இல்லை. நாங்களும் உங்களோடு சேர்ந்து பயணிக்க ஆசைப்படுகிறோம் என வைகோ தெரிவித்தார். இதுதான் உள்ளே பேசப்பட்டது. அவர்கள் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்று இருக்கிறார்கள். அவர்களோடு எப்படி சேர்ந்து பயணிக்க முடியும்?” இவ்வாறு பேசினார்.





