பொறியியல் சேர்க்கை – தரவரிசை பட்டியல் வெளியீடு
தமிழ்நாட்டில் சுமார் இரண்டே கால் லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் இன்று வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் அரசு பொறியியல் கல்லூரிகள் உட்பட 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் வழங்கப்படும் பி.இ, பி.டெக் படிப்புகளில் சுமார் ஒரு லட்சத்து 8 ஆயிரம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக உள்ள நிலையில் இவை பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு பிஇ, பிடெக் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே 3ஆம் தேதி தொடங்கி ஜூன் 5ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் சுமார் இரண்டே கால் லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ள நிலையில், சான்றிதழ்களைச் சரிபார்க்கும் பணி நிறைவுபெற்றது.
இதையடுத்து தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு தேதிகள் இன்று வெளியாகி உள்ளன. அதன்படி கட் ஆஃபில் 53 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 39 மாணவர்கள் தமிழ்நாடு அரசு துறை சார்பில் படித்தவர்கள். கட் ஆஃபில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷிதா 200-க்கு 200 பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேலத்தைச் சேர்ந்த தேவதர்ஷனி முதலிடம் பெற்றுள்ளார். தரவரிசைப் பட்டியலை tneaonline.org என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம் என்றும் அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வு ஜூலை 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நடைபெறும். 7.5 இடஒதுக்கீடு, விளையாட்டு ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஜூலை 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றைச் சரிசெய்வதற்கான குறைதீர்ப்பு காலம் இன்று முதல் ஜூலை 5ஆம் தேதி வரை வழங்கப்படும். மாணவர்கள் தங்களுக்குரிய குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





