பாஜகவினரை தாக்கியதாக விசிக பிரமுகர் கைது..!
பெரம்பலூரில் பாஜகவினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பாஜகவினரை அதே பகுதியை சேர்ந்த சிலர் ஓட்டுக்கு பணம் கேட்டு கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
இந்த தாக்குதலில் தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் கந்தசாமி என்பவரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கத்தி மற்றும் கற்களால் தாக்கப்பட்டதில் அவரது சகோதரரும் பாஜக ஒன்றிய நிர்வாகியுமான லக்ஷ்மணன் என்பவரின் தலையிலும் முதுகிலும் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
காயமடைந்த இருவரும் பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனையடுத்து இந்த தாக்குதல் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 9 நபர்களை தேடும் பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளன. தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த நிலையில் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பாஜக நிர்வாகி கந்தசாமி குற்றம் சாட்டியிருக்கிறார்.





