ஃபேஸ்புக் காதலால் விபரீதம்…! 16 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்…
பேஸ்புக்கில் அறிமுகமான சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வதற்காக ஃபேஸ்புக்கை பயன்படுத்திய சிறுமி அதில் கிடைத்த நண்பரால் நடுரோட்டில் தவிக்கவிடப்பட்டு இருக்கிறார்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அந்த சிறுமிக்கு வயது 16. பள்ளி பருவத்தை தாண்டாத அந்த சிறுமி தனது வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறார் என்பது கேட்பதற்கு அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால் அதுதான் உண்மை.
மகள் மீது பேரன்பு கொண்ட சிறுமியின் தந்தை சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கித் தந்திருக்கிறார். பள்ளிக்கு தான் போகவில்லை நாட்டு நடப்புகளையாவது தெரிந்து கொள்வோம் என்று நினைத்த அந்த சிறுமி சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளார்.
எல்லோரையும் போல பேஸ்புக் அக்கவுண்டை தொடங்கிய அந்த சிறுமிக்கு தென்காசியை அடுத்த சொக்கம்பட்டி சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் அறிமுகமானார். இனிக்கும் சாட்டிங்கில் துளிர்விட்ட இவர்களின் நட்பு செல்போன் உரையாடல் மூலம் காதலாகி அசைக்கமுடியாத ஆலமரம் ஆகிவிட்டது.
சிறுமியின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்ட ராதாகிருஷ்ணன் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவரை கோவைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியவர் சிறுமியை தனது பாலியல் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டதாக தெரிகிறது.
ராதாகிருஷ்ணன் செல்போனை எடுத்து பார்த்தபோது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்து தப்பி வந்த சிறுமி பெற்றோரின் துணையுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அது குறித்து நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர் ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் காதலனை நம்பியதால் சிறுமிக்கு நேர்ந்த சோகம் இனி வேறு ஒருவருக்கு நிகழக்கூடாது.






