திமுக கூட்டணி டமால்! விஜய்க்கு ‘கை’ கொடுத்த காங்கிரஸ்.. ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி
தமிழக அரசியலின் தற்போதைய மையப்புள்ளி… தளபதி விஜய்! தேர்தல் களம் முடிந்து முடிவுகள் வெளியான வேகத்தில், கோட்டை நோக்கி விஜய் முன்னெடுக்கும் ஒவ்வொரு நகர்வும் தமிழகத்தையே அதிரவைத்துக் கொண்டிருக்கிறது. 234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டசபையில், 108 இடங்களை அள்ளிக் குவித்து தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருக்கும் நிலையில், ஆட்சி அமைப்பதற்கான ‘மேஜிக் நம்பர்’ 118-ஐ எட்ட விஜய் போடும் பகடைக்காய்கள், திமுக கூட்டணியில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கோட்டையை நோக்கிய விஜய்யின் வியூகம்!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடிக்கத் தேவைப்படுவது இன்னும் 10 இடங்கள். இந்த இடைவெளியை நிரப்ப விஜய் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை, திமுகவின் தற்போதைய கூட்டணிக் கட்சிகளை மையப்படுத்தியது. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எனத் தோழமைக் கட்சிகள் ஒவ்வொன்றாக விஜய்யை நோக்கி நகர்வது, திமுக தலைமைக்குத் தலைவலியை மட்டுமல்ல, பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அளித்த பேட்டி, ஒருவகையான அரசியல் சிக்னல். “தமிழக மக்கள் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் எனத் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர். பாஜக மற்றும் அதன் கூட்டணி பரிவாரங்கள் தமிழகத்தில் ஆட்சி அமைக்கக் கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது” என்று அவர் கூறியது, அரசியல் வட்டாரத்தில் பலத்த விவாதத்தை உருவாக்கியுள்ளது. பெருந்தலைவர் காமராஜரைத் தனது அரசியல் வழிகாட்டியாகப் பிரகடனப்படுத்தியிருக்கும் விஜய்யின் நிலைப்பாட்டையும் காங்கிரஸ் தலைமை பரிசீலனைக்கு உட்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் விஜய் ஆட்சி அமைக்க, காங்கிரஸ் கை கொடுக்க முன்வந்துள்ளது.
உடைந்து சிதறும் திமுக கூட்டணி?
தேர்தலுக்கு முன்பு ’22 கட்சிகள் கொண்ட மாபெரும் கூட்டணி’ என்று முழங்கிய திமுக கூட்டணியில் இப்போது ஓட்டை விழுந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கை முடிந்த சூட்டோடு சூடாக, கொளத்தூரில் மக்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலினின் முகம், அறிவாலயம் திரும்பிய பிறகு மாறியிருந்ததை உணர்ந்தனர். அதற்கு காரணம், முதுகில் குத்திவிட்டு காங்கிரஸ், திடீரென தவெக பக்கம் போவதுதான்.

காங்கிரஸ் கட்சி தனது 5 எம்.எல்.ஏ-க்களுடன் விஜய்யின் ஆட்சிக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. அடுத்த கட்டமாக, திருமாவளவனின் விசிகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் ஆதரவு கேட்டு விஜய் தரப்பில் அணுகி உள்ளனர். எனவே, திமுக கூட்டணியிலிருந்து விடுபட்டு தவெக பக்கம் அவர்கள் சாய்வதும் ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இதன் பின்னணியில் தான், “தங்கள் கட்சி முன்மொழிந்த கூட்டணி ஆட்சியையே மக்கள் வழிமொழிந்துள்ளனர்” என்று திருமாவளவன் இப்போதே தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
அமைச்சரவை கணக்கு… களத்தில் என்ன நடக்கிறது?
அரசியல் களத்தின் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், விஜய் அமைக்கும் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்படுவதாகத் தகவல்கள் கசிகின்றன. இடதுசாரி கட்சிகளின் 4 எம்.எல்.ஏ-க்கள் நேரடியாக அமைச்சரவையில் சேராவிட்டாலும், ‘குறைந்தபட்ச செயல் திட்டத்துடன்’ வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முன்வரலாம் என்று தெரிகிறது. ஒருவேளை கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவு அளிக்க முன்வராவிட்டால், விஜய் மாற்று திட்டத்தை வைத்துள்ளாராம். ஆனால், அது சஸ்பென்ஸ் என்கிறார்கள் தவெக மூத்த நிர்வாகிகள்.
திமுக கூட்டணி உடைந்துள்ள சூழலில், திமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சியை கழுவி ஊற்றத் தொடங்கிவிட்டனர். “திமுகவின் முதுகில் காங்கிரஸ் குத்திவிட்டது” என்ற கோஷம் ஒருபக்கம் எதிரொலிக்க, மறுபக்கம் தமிழகத்தின் புதிய ஆட்சியாளராக விஜய் பதவியேற்பு குறித்த தகவல்களும் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
பரபரப்பு ஓயாத அரசியல் களம்
தமிழக அரசியலில் இந்தத் தேர்தல் முடிவு ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம். பெரும் வெற்றியை ஈட்டிய விஜய், தனது முதல் அடியிலேயே திமுக கூட்டணியை உலுக்கி, சிதறடித்திருப்பது சாதாரணமான விஷயமல்ல. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரும் 8-ம் தேதி கூடி தனது இறுதி முடிவை எடுக்கவுள்ள நிலையில், அதன்பிறகு ஆட்சியமைப்பதற்கான முறைப்படியான கோரிக்கையை விஜய் ஆளுநரிடம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் பரபரப்பு ஓய்ந்துவிட்டதாகத் தோன்றினாலும், தமிழகத்தின் புதிய ஆட்சி பெரும்பான்மையை உறுதி செய்யும் வரை, தமிழகத்தின் அரசியல் களம் இன்னும் பல திருப்பங்களைச் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஸ்டாலின் சந்திக்கும் இந்த அதிர்ச்சி, வெறும் தேர்தல் தோல்வி மட்டுமல்ல… அது அவர் கட்டமைத்த கூட்டணியின் அரசியல் ரீதியான வீழ்ச்சியின் ஆரம்பம் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.
மே 7ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் விஜய் பதவியேற்பு விழா நடைபெறும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், நேற்று வரை ஆளுங்கட்சியாக கம்பீரமாக இருந்த திமுக கூட்டணி பிளவுபடுவது தமிழக அரசியலில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டுவரும்? பொறுத்திருந்து பார்ப்போம்!





