திமுகவில் யார் யாருக்கு வாய்ப்பு? இன்று வெளியாகிறது பட்டியல்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாகிறது. கருணாநிதி நினைவிடத்தில் வைத்து, மரியாதை செலுத்திய பின்னர், மு.க.ஸ்டாலின் இப்பட்டியலை வெளியிடுகிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்- 25, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி- 6, இந்திய கம்யூனிஸ்டு கட்சி- 6, ம.தி.மு.க.- 6, விடுதலை சிறுத்தைகள் கட்சி- 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- 3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 3, மனிதநேய மக்கள் கட்சி- 2, தமிழக வாழ்வுரிமை கட்சி- 1, மக்கள் விடுதலை கட்சி- 1, ஆதித் தமிழர் பேரவை- 1 என மொத்தம் 61 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு நேற்றிரவுடன் முடிவடைந்தது. கடைசியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடும் 6 தொகுதிகள் எவை என்று முடிவு செய்யப்பட்டு, இப்படி முழுமையடைந்தது.
தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல், இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர் பட்டியலை வெளியிடும் முன்பு, சென்னை மெரினா கடற்கரைக்கு செல்லும் மு.க. ஸ்டாலின், அங்குள்ள கருணாநிதி நினைவிடத்தில் வேட்பாளர் பட்டியலை வைத்து, மரியாதை செலுத்துகிறார். அதன் பின்னர், வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.





