தமிழகத்தில் நவ.30 வரை கொரோனா ஊரடங்கு நீடிப்பு.. பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்களுக்கு அனுமதி!!
தமிழகத்தில் நவம்பர் 30-ந் தேதி வரை கொரோனா ஊரடங்கு நீடிக்கப்படுவதாகவும், பள்ளி, கல்லூரிகளை நவம்பர் 16-ந் தேதி முதலும், தியேட்டர்கள் பொழுதுபோக்கு பூங்காக்களை 10-ந் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ந் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, தொடர்ந்து 9 மாதங்களாக நீட்டிக்கப்பட்டு வருகிறது . முதலில் முழு ஊரடங்கு போடப்பட்ட நிலையில், அடுத்தடுத்து நீட்டிக்கப்படும் பொழுது பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.
தற்போது தமிழகத்தில் பெரும்பாலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கடைகள், பேருந்து போக்குவரத்து உட்பட அனைத்தும் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது. பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், பொழுது போக்கு இடங்கள் போன்ற சிலவற்றுக்கு மட்டும் தடை தொடர்ந்தது.
ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில், மேற் கொண்டு நீட்டிப்பதா? அல்லது கூடுதல் தளர்வு களை அறிவிப்பதா? என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 28-ந் தேதி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து நவம்பர் 30-ந் தேதி வரையும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே வேளையில் புதிய தளர்வுகள் என்னென்ன என்பது பற்றியும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி முக்கிய தளர்வுகள் விபரம் வருமாறு:
நவம்பர் 16-ந் தேதி முதல் Uள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி . பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை அனுமதி .
தியேட்டர்கள், பொழுது போக்கு பூங்காக்களை நவம்பர் 10-ந் தேதி முதல் திறக்க அனுமதி .
புறநகர் மின்சார ரயில்களும் நவம்பர் 10-ந் தேதி முதல் இயக்கப்படும் என தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதே வேளையில் கடற்கரை, நீச்சல் குளங்களுக்கான தடை நவம்பர் 30-ந் தேதி வரையும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.







