விராலிமலையில் ஜல்லிக்கட்டு காளை சிலையை திறந்த முதல்வர் எடப்பாடி
ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன விராலிமலையில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒரு நாள் பயணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை விமானத்தில் திருச்சி சென்றார். முதல் நிகழ்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ரூ.100 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள ஐ.டி.சி தொழிற்சாலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
பின்னர், ஜல்லிக்கட்டு நினைவாக விராலிமலையில் அமைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளை சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சீறி வரும் ஜல்லிக்கட்டு காளையின் திமிலை வீரன் ஒருவன் பிடித்து அடக்குவது போல் இந்த சிலை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது.
இச்சிலையை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தமது சொந்த செலவில் அமைத்திருந்தார். இந்த சிலையை திறந்து வைத்து பேசிய
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிக இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது .
கடந்தாண்டு மட்டும் புதுக்கோட்டையில் 110 இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது என்று புகழ்ந்தார். மேலும் புதுக்கோட்டை மக்களின் எதிர்ப்பார்ப்பான காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.






