பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்..!
கொரொனா நிவாரண நிதியாக 2 கோடியே 9 லட்சத்து 81,900 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கொரொனா நிதியின் முதல் தவணை 2,000 ரூபாய் கடந்த மாதம் 15ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இதற்காக 4 ஆயிரத்து 196 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கொரொனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணை 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை கலைஞர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இரண்டாவது தவணை கொரொனா நிதிக்காக மேலும் நான்காயிரத்து 196 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாயவிலைக்கடை மூலம் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கோதுமை மாவு, சர்க்கரை, உப்பு, ரவை, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட 14 வகையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு நியாய விலை கடைகளில் வழங்கப்படவுள்ளது. இதற்காக 844 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல ஏற்கனவே அறிவித்தபடி பதினான்காயிரம் கோயில் பணியாளர்களுக்கு கொரொனாக்கால நிவாரண உதவியாக தல நான்காயிரம் ரூபாய் நிவாரணமும் 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கொரொனாவால் உயிரிழந்த பத்திரிக்கையாளர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், காவலர்கள், நீதிபதிகள் அவரின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கும் திட்டத்தையும் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.






