தி.மு.க முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!
சென்னை துறைமுகம் தொகுதியில், தேர்தல் நாளில் வாக்குப்பதிவு மையத்தின் அருகே த.வெ.க வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் அவருடைய ஆதரவாளர்களைத் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பி.கே. சேகர்பாபு மீது சென்னை வடக்கு கடற்கரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் நாளன்று குறிப்பிட்ட வாக்குப்பதிவு மையத்தின் அருகே நிலவிய பதற்றமான சூழலில், த.வெ.க வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் தி.மு.க வேட்பாளர் சேகர்பாபு ஆகிய இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. வாக்குச்சாவடிக்கு வெளியே நிகழ்ந்த இந்த மோதல், ஒருகட்டத்தில் இரு தரப்பினரும் நேரடியாகத் தாக்கிக் கொள்ளும் அளவிற்கு வன்முறையாக மாறியது. அப்போது சேகர்பாபு தரப்பினர் த.வெ.க வேட்பாளரை அச்சுறுத்தும் வகையிலும், தேர்தல் ஒழுங்குமுறை விதிகளை மீறும் வகையிலும் வன்முறையில் ஈடுபட்டதாகத் த.வெ.க தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தத் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவம் குறித்து த.வெ.க வேட்பாளர் சினோரா அசோக் அளித்த முறையான புகாரின் அடிப்படையில், போலீசார் தற்போது தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, சட்டவிரோதமாகக் கூடுதல், பொது அமைதியைக் கெடுத்தல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் தி.மு.க எம்.எல்.ஏ சேகர்பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், இந்த சட்ட நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





