பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்ட கூட்டணியில் இடம் பெறவில்லை – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு
பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ளது போன்று, தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெறவில்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் அந்த கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைத்தது மட்டுமல்லாமல் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் தமிழ்நாடு சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்கி தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் அறிவிப்பு வெளியிட்டார். காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாநிலங்களவை இடத்தில் அக்கட்சியின் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் முதல் எம்.பி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாக கருதுவதாக பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.
இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழக வெற்றிக்கழக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி தனது வலைதள பதிவில் “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியின் சார்பில்” தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அக்கூட்டணியில் இடம் பெற்றுள்ளது போல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.
இது தவறானது.இத்தகைய கூட்டணி அமைப்பது குறித்தோ, குறிப்பிட்ட இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை நாடவில்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிடம் இது குறித்து கலந்து கொள்ளவும் இல்லை, கருத்துக் கேட்கவும் இல்லை. அத்தகைய, “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி” பற்றி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதுவும் தெரியாது.நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவான தவெக ஆட்சி அமைக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவை வழங்கியது.
ஆளுநர் ஆட்சி அல்லது மறைமுகமான பாஜக ஆட்சி அமைந்துவிடக் கூடாது, ஒன்றிய அரசின் சதி திட்டங்களுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பளித்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் இந்த ஆதரவை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அளித்துள்ளது. பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ளது போன்ற ஓர் கூட்டணியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறவில்லை என்பதை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறது.





