மேட்டுப்பாளையத்தில் பெண் யானை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல்!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவில் ஐடிசி நீரேற்று நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பெண் யானை ஒன்று காதில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடப்பதாக வனத்துறையிறருக்கு தகவல் தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து இறந்து கிடந்த யானையின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் வனத்துறை மருத்துவருக்கு பிரேத பரிசோதனைக்காக உத்தரவிட்டார். வனத்துறை மருத்துவர் பிரேத பரிசோதனையில் இறந்த யானையின் தலையின் மூளையில் ஈயக்குண்டு தாக்கி உள்ளது தெரிய வந்துள்ளதாகவும்,இடது காது அருகில் இருந்த காயத்திலிருந்து மூளை வரை துளைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
“துப்பாக்கியால் சுடப்பட்டு யானை உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது”
இதனையடுத்து யானை இறந்து கிடந்த தோட்டத்தின் உரிமையாளர்கள் தேக்கம்பட்டி இராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி இருவரையும் பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் காட்டு யானை ஒன்று அன்னாசி பழத்தில் வைத்த வெடியால் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள வன ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், மேட்டுப்பாளையம் பெண் யானை துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளது வன ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
“தவறு செய்தவர்கள் மீது வன உயிரின சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,அப்படி நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே வன உயிரினங்களை காப்பாற்ற முடியும் எனவும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.”
காட்டு யானையை சுட துப்பாக்கி எப்படி கிடைத்தது ? வேறு வன விலங்குகளை வேட்டையாடி உள்ளனரா ? என்பது குறித்து காவல் துறையினரும்,வனத்துறையினரும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.






