ஈரானின் அணுஉலைகளை தாக்குங்கள்..!
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வட கரோலினாவில் பரப்புரை கூட்டமொன்றில் பேசிய டிரம்ப், ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு பின்னர் அதன் தாக்கங்கள் குறித்து கவலை கொள்ளலாம் என்று கூறினார்.
இஸ்ரேல் – காஸா இடையேயான போர் திசை மாறி உள்ளது. இந்த போர் இஸ்ரேல் – லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இடையேயான மோதலாக மாறியது. அதன்பிறகு தற்போது இஸ்ரேல் – ஈரான் மோதலாக உருவாகி உள்ளது.
ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உருவாகி உள்ளது.ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஈரான் ஆதரவு அமைப்பினர். இஸ்ரேல் அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி தலைவர்களை கொன்று குவித்து வருவதால் ஈரான் கடும் கோபமடைந்து தாக்குதலை தொடங்கி உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கு அட்வைஸ் ஒன்றை சொல்லி பதற்றத்தை அதிகரித்துள்ளார்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் டொனால்ட் டிரம்ப் பிரசாரம் மேற்கொண்டபோது, ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்பின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய அமெரிக்க அதிபர் பைடன், ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேலை தாக்குதல் நடத்த தூண்டுவது தவறான செயல் என தெரிவித்துள்ளார்.





