தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பா..? – டி.கே.சிவக்குமார்
தண்ணீரை நாம் கட்டுப்படுத்தி வைக்க நினைத்தால் நம்மை அது அடித்து சென்றுவிடும் என கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளதால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 3500 கனஅடி வீதம் நீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதனால் கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பாஜக மூத்த நிர்வாகியும் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தனது ஆதரவாளர்களுடன் கே.ஆர்.எஸ். அணைப் பகுதிக்கு சென்று, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டார். தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆகஸ்ட் 13-ஆம் தேதி கர்நாடகா முழுவதும் பந்த் நடத்தப்படும் என கன்னட அமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.இதனிடையே, நாளை நடைபெறவுள்ள கர்நாடகா அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முன்னிட்டு, பெங்களூருவில் முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையில் நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி நீர் தொடர்பாக கடையடைப்பு போராட்டத்தை கைவிட வேண்டுமென கேட்டுக் கொண்டார். கர்நாடகாவில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தண்ணீரை நாம் கட்டுப்படுத்தி வைக்க நினைத்தால் நம்மை அது அடித்து சென்றுவிடும் என்றும் தெரிவித்தார். இதனால் விரைவில் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



