பள்ளிகள், கோவில்கள் அருகே இன்னமும் 129 டாஸ்மாக் கடைகள்..!
தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களின் 500 மீட்டர் சுற்றளவுக்குள் 129 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருவதாக ‘வி தி லீடர்ஸ்’ (We the Leaders Foundation) அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு, ‘வி தி லீடர்ஸ்’ அறக்கட்டளை சார்பாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் விவரங்களை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள்ளேயே சுமார் 129 டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் தொடர்ந்து இயங்கி வருவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
எனவே, நமது குழந்தைகள் கல்வி பயிலும் இடங்கள், பொதுமக்கள் பிரார்த்தனை செய்யும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அவர்கள் பயணம் செய்யும் பேருந்து நிலையப் பகுதிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, இந்த 129 டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.



