அதிகாரிகளா? ஐடி விங் நிர்வாகிகளா? சட்டம் ஒழுங்கு சூப்பர் என பேட்டி..வறுத்தெடுக்கும் நெட்டிஸன்கள்..!
தமிழகத்தின் பல இடங்களிலும் பட்டப்பகலில் நடக்கும் கொலைகள், சந்து பொந்துகளிலெல்லாம் சங்கீதம் பாடும் கஞ்சா விற்பனை, கள்ளச்சந்தையில் கரைபுரண்டு ஓடும் போதைப்பொருள்… இப்படித் தமிழகமே ‘அமைதிப் பூங்கா’வாக இல்லாமல் ‘அச்சப் பூங்கா’வாக உருமாறிக்கொண்டிருக்கிறது.
தினமும் காலை நாளிதழைத் திறந்தால் ரத்தக் கறை படியாத செய்திகளே இல்லை என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் மக்கள். ஒற்றைக் கொலை, இரட்டைக்கொலை, செயின் பறிப்பு எனத் தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எதிர்க்கட்சிகளோ, “தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா இல்லை அராஜகம் நடக்கிறதா?” என்று ஆளுங்கட்சியின் சட்டையைப் பிடித்துக் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கடுமையான விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சரோ அல்லது துறை சார்ந்த அமைச்சர்களோ முன்வராமல், திடீரென ஒரு நாள் கோட்டைக்குள் இருந்து ‘கூண்டுக்கிளிகளாக’ வெளியே வந்திருக்கிறார்கள் உள்துறைச் செயலாளர் தீரஜ் குமாரும், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனும். அவர்கள் கொடுத்த பேட்டியைப் பார்த்த மக்கள், “இது அதிகாரிகளின் பத்திரிகையாளர் சந்திப்பா அல்லது அறிவாலயத்தின் ஐடி விங் கூட்டமா?” என்று வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.
புள்ளி விவரங்களுடன் பேட்டி!
சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 12ஆம் தேதி நடந்த அந்தச் செய்தியாளர் சந்திப்பில், உள்துறைச் செயலாளர் தீரஜ் குமார் கையில் ஒரு புள்ளிவிவரப் பட்டியலை வைத்துக் கொண்டு ராகம் பாடினார். “கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துவிட்டன” என்று அவர் சொன்னபோது, பக்கத்திலிருந்த பத்திரிகையாளர்களுக்கே சிரிப்பு வந்துவிட்டது.
கடந்த 2021-ஆம் ஆண்டில் 1,597 ஆக இருந்த கொலைகள், 2025-ல் 1,461 ஆகக் குறைந்துவிட்டது என்றார் அவர். அடேங்கப்பா… 136 கொலைகள் குறைந்திருப்பதை ஒரு பெரிய சாதனையாகச் சொல்லித் தங்களுக்குத் தாங்களே முதுகு சொறிந்து கொள்கிறார்கள் அதிகாரிகள்.
உண்மையில், இந்த எண்ணிக்கைக் குறைப்பு என்பது காகிதத்தில் வேண்டுமானால் ஜொலிக்கலாம். ஆனால் கள யதார்த்தம் என்ன? இன்று தெருவுக்குத் தெரு பட்டாக்கத்திகளுடன் சுற்றும் கும்பல்களும், போதை மயக்கத்தில் சக மனிதனைச் சிதைக்கும் இளைஞர்களும் பெருகிவிட்டதை இந்த அதிகாரிகள் வசதியாக மறைக்கிறார்கள். சட்டம் – ஒழுங்கு குறித்து ‘உண்மைக்கு மாறான’ செய்திகள் வருவதாகச் சொல்லும் இவர்கள், தினசரி தொலைக்காட்சிகளில் ஓடும் சிசிடிவி காட்சிகளைப் பார்ப்பதே இல்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.

விழிப்புணர்வால் போக்சோ அதிகரிப்பாம்!
அடுத்து மைக்கைப் பிடித்த பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் சொன்ன ஒரு விளக்கம் இருக்கிறதே… அதுதான் ஹைலைட்! “தமிழகத்தில் போக்சோ வழக்குகள் ஏன் அதிகரித்திருக்கிறது தெரியுமா? நாங்கள் பள்ளிக்கல்வித் துறை மற்றும் சமூக நலத்துறையுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், பாதிக்கப்பட்டவர்கள் இப்போது தைரியமாகப் புகாரளிக்க வருகிறார்கள். அதனால்தான் எண்ணிக்கை கூடியிருக்கிறது” என்று ஒரு ‘சப்பைக்கட்டு’ கட்டினார்.
இதைக் கேட்டுச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிழி கிழி எனத் தைத்துக் கொண்டிருக்கிறார்கள். “குற்றங்கள் நடப்பதே உங்கள் தோல்விதான். அதைக் கட்டுப்படுத்தத் துப்பில்லாமல், புகார்கள் அதிகமாக வருவதை ஒரு சாதனையாகச் சொல்வது எந்த ஊர் நியாயம்?” என்பதுதான் பொதுமக்களின் குமுறல்.
போக்சோ சட்டத்தின் கீழ் சிக்கும் குற்றவாளிகளில் பெரும்பாலானோர் ஆளுங்கட்சியின் பின்புலம் கொண்டவர்களாக இருப்பதையும், அவர்களுக்குக் காவல் நிலையங்களிலேயே ‘சிவப்புக் கம்பள’ வரவேற்பு அளிக்கப்படுவதையும் டிஜிபி மறந்துவிட்டாரா?
காவல் மரணங்களும்… கைகழுவும் அரசும்!
காவல் நிலைய மரணங்கள் குறித்துப் பேசிய உள்துறைச் செயலாளர், “இதைச் சகித்துக் கொள்ள முடியாது” என்று மேஜையைத் தட்டினார். அஜித் குமார் கொலை வழக்கைச் சிபிஐ-க்கு மாற்றியதை ஒரு வெளிப்படைத்தன்மைக்குச் சான்றாக முன்வைக்கிறார். ஆனால், காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்றவர்கள் பிணமாகத் திரும்புவது தொடர்கதையாகி வருகிறது என்பதற்கு சமீபத்திய ஆகாஷ் மரணம் ஒரு உதாரணம். இந்த நிலையில், “மக்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறோம்” என்று சொல்வதெல்லாம் வெறும் கண்துடைப்பு அரசியல் என்பது பாமரனுக்கும் தெரியும்.
ஆகாஷ் மரணத்தில் சிபிசிஐடி அறிக்கை வந்த பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பந்தை உருட்டி விடுகிறார்கள். காவல் துறையினரே குற்றவாளிகளாக மாறும் ஒரு அவலச் சூழலில், அதே துறையின் கீழ் வரும் சிபிசிஐடி எந்த அளவுக்கு நடுநிலையாகச் செயல்படும் என்பது மில்லியன் டாலர் கேள்வி. ‘நிரந்தர டிஜிபி’ யார் என்பதே தெரியாமல், ஒரு பொறுப்பு டிஜிபியை வைத்துக் கொண்டு ஓடும் தமிழகக் காவல் துறை, எப்போதுதான் சுதந்திரமாகச் செயல்படும்?
அதிகாரிகளா? உடன்பிறப்புகளா?
சமூக வலைதளங்களில் இந்தப் பேட்டிக்கு எழுந்த எதிர்வினைகள் மிகக் கடுமையானவை. “ஆளுங்கட்சிக்கு வக்காலத்து வாங்க இன்புளூயன்சர்களுக்குக் காசு கொடுக்கிறார்கள். ஆனால், அரசு சம்பளம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் ஏன் ஜால்ரா தட்டுகிறார்கள்?” என்று மக்கள் ஆவேசப்படுகிறார்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களின் பதவியின் மாண்பைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, அறிவாலயத்தின் உத்தரவுக்குக் காத்திருக்கும் ஊதுகுழல்களாக மாறிப்போனது ஜனநாயகத்தின் மிகப்பெரிய சாபக்கேடு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மதுவுடன் போதைப்பொருள் கலாச்சாரம் கலந்து, இளைஞர் சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கிறது. இதில் திமுக, அதிமுக, பாஜக, விசிக என எந்தக் கட்சிப் பாகுபாடும் இல்லை என்றாலும், அதிகாரப் பலத்தில் இருக்கும் திமுகவினரின் அத்துமீறல் எல்லை மீறிப்போயுள்ளதை நடுநிலையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். வழிப்பறி, சங்கிலி பறிப்பு முதல் திட்டமிட்ட கொலைகள் வரை துணிச்சலாக நடப்பதற்குப் பின்னணியில் இருக்கும் அரசியல் நிழல்களைக் கலைக்காமல், வெறும் புள்ளிவிவரங்களால் மக்களை ஏமாற்ற முடியாது.
ஜால்ரா சத்தத்தை குறையுங்கள்!
இறுதியாக ஒன்று… தலைமைச் செயலகத்தில் கேமராக்களுக்கு முன்னால் அமர்ந்து ‘ஆல் இஸ் வெல்’ என்று சொல்வது எளிது. ஆனால், நள்ளிரவில் தனியாகச் செல்லும் ஒரு பெண் பயமில்லாமல் வீடு திரும்ப முடிகிறதா? ஒரு சாதாரண மனிதன் காவல் நிலையத்திற்குச் சென்றால் அவனுக்கு நீதி கிடைக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கான பதில் ‘இல்லை’ என்று வரும் வரை, அதிகாரிகள் எத்தனை முறை பத்திரிகையாளர்களைச் சந்தித்தாலும் அது ‘ஜால்ரா’ சத்தமாகவே ஒலிக்கும்.
அரசே… காவல்துறையையே ஏவல் துறையாக மாற்றியிருந்தது போதும்! இப்போது அவர்கள் ‘அறிக்கை துறையாகவும்’ மாறிவிட்டது வேதனை. இனியாவது புள்ளிவிவரப் புனைவுகளை விட்டுவிட்டு, ரத்தக் கறையில்லாத தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுங்கள். இல்லையெனில், மக்கள் நீதிமன்றம் இதற்கான தண்டனையை வரும் தேர்தல் நேரத்தில் வழங்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.





