--- --:--:-- --

விஜய் வேளாங்கண்ணி வருகை திடீர் ரத்து..!

10

த.வெ.க தலைவர் விஜய், இன்று வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டதால், அங்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்த நிலையில், விஜய் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டதால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.

 

 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4-ந் தேதி (நாளை மறுநாள்) எண்ணப்பட உள்ள நிலையில், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி, அ.தி.மு.க. பா.ஜ.க கூட்டணி, நாம் தமிழர், தமழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டியில் யார் ஆட்சியை பிடிப்பார் என்று கணிக்க முடியாத அளவுக்கு இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தமிழக வெற்றிக் கழகம் கட்சி முதல் முறையாக சட்டசபை தேர்தலை சந்தித்து அதன் முடிவுக்காக காத்திருக்கும் நிலையில், அந்த கட்சியின் தலைவர் விஜய், கடந்த சில தினங்களாக ஆன்மீக பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த வாரம் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரினம் செய்த அவர், அடுத்து ஷீரடி சாய் பாபா கோவில் சாமி தரிசனம் செய்தார். இந்த இரு இடங்களிலும் விஜயை பார்க்க ரசிகர்கள் குவிந்த நிலையில், அவர் இன்று வேளாங்கண்ணிக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியானது.

 

 

இதனைத் தொடர்ந்து விஜயை பார்க்க ரசிகர்கள் பலரும் அதிகாலை முதலே வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குவிந்த நிலையில், சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகள், மொட்டை மாடிகளில், பலரும் விஜயை பார்க்க ஆர்வமாக நள்ளிரவு முதலே காத்திருந்தனர். மேலும் விஜய் வருகைக்காக 3 மாவட்டங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், தேவாலயத்திற்குள் ஏராளமானோர் குவிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விஜய் வருகை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

 

 

இது குறித்து தேவாலய ஒலிப்பெருக்கியில், விஜய் வந்தால் அவருடன் இணைந்து வழிபாட்டில் அனைவரும் பங்கேற்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அவர் வருவது பற்றி தங்களுக்கு எவ்வித தகவலும் இல்லை. எனவே வழிபட வந்த பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல், இருக்கும்படி தேவாலயம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு விஜய் ரசிகர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

 

முன்னதாக வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், நள்ளிரவு முதலே திரண்ட த.வெ.க தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் திருப்பலி நேரத்தில் பேராலயத்தில் திரண்டு டி.வி.கே டி.வி.கே என கூச்சலிட்டதால், வழிபாட்டுக்கு இடையூறு இன்றி அமைதி காக்க பேராலயம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon