--- --:--:-- --

ஓய்ந்து போன புரட்சி புயல்! வாரிசு பாசத்தில் மூழ்கிய வைகோ! 4 சீட்டுக்கு அடகுபோன மதிமுக!

collage-down-1773279321

மிழக அரசியலில் ஒரு காலத்தில் ‘புரட்சிப் புயல்’ என வர்ணிக்கப்பட்டவர் வைகோ. அவரது கணீர் குரலும், ஆவேசமான மேடைப் பேச்சும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்தது. திமுகவில் இருந்து பிரிந்து, ‘திராவிட அரசியலில் ஒரு புதிய விடியலை உருவாக்குவோம்’ எனச் சபதமேற்று மதிமுகவைத் தொடங்கியபோது, அது ஒரு மாற்று சக்தியாகவே பார்க்கப்பட்டது.

 

ஆனால், காலச்சக்கரம் சுழலச் சுழல, இன்று அந்தக் கட்சி தன் சுயமரியாதையை இழந்து, அண்ணா அறிவாலயத்தின் வாசலில் ‘சீட்’டுக்காகக் தவம் கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, ‘வாரிசு அரசியலை’ எதிர்த்துப் போர்க்கொடி தூக்கிய வைகோ, இன்று தன் மகனுக்காகத் தனது கொள்கைகளையே அடகு வைத்த காட்சி, அக்கட்சிகாக தியாகங்களை புரிந்த உண்மையான மதிமுக தொண்டர்களைக் ரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்திருக்கிறது.

 

சூரியனில் சங்கமித்த பம்பரம்!

 

சட்டமன்றத்தேர்தலுக்கான களம் சூடுபிடித்துவிட்ட நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில் மதிமுகவுக்கு விழுந்திருக்கும் மிகப்பெரிய அடி என்னவென்றால், “மீண்டும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும்” என்கிற திமுகவின் கறாரான நிபந்தனைதான்.

 

இதை ஏதோ இரண்டாம் கட்டத் தலைவர்கள் சொல்லவில்லை; நேரடியாகவே முதலமைச்சர் ஸ்டாலின், வைகோவிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறார். “கூட்டணி தர்மம் காக்கப்பட வேண்டும், சின்னம் சிதறக்கூடாது” என்கிற போர்வையில், மதிமுகவின் அடையாளத்தையே அழிக்கும் வேலையை திமுக கச்சிதமாகச் செய்து வருகிறது.

 

கடந்த தேர்தலிலேயே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, இன்று சட்டசபையில் ‘திமுக எம்.எல்.ஏ’க்களாகவே அறியப்படும் மதிமுகவினரைப் பார்த்து விக்கித்து நின்ற தொண்டர்களுக்கு, மீண்டும் அதே நிலை தொடர்வது பேரதிர்ச்சியாக இருக்கிறது. பம்பரம் சின்னத்தை மீட்டெடுக்கப் போராட வேண்டிய தலைமை, அறிவாலயத்தின் நிபந்தனைக்குத் தலைவணங்கி நிற்பது, கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது.

வாரிசு பாசமும்… வாடிப்போன தொண்டர்களும்!

 

இந்த இக்கட்டான சூழலில்தான், மதிமுகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் சமீபத்தில் கூட்டப்பட்டது. அங்கே விவாதிக்கப்பட்ட விஷயங்கள் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல அமைந்தன. கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், “நமது சொந்தச் சின்னத்தில் போட்டியிடாவிட்டால் கட்சி அழிந்துவிடும்” என்று கதறினார்கள். ஆனால், அங்கே ஒலித்த ஒரே ஒரு பிடிவாதக் குரல் துரை வைகோவுடையது மட்டும்தான். “நிச்சயமாக ஒரு தொகுதியிலாவது நான் சொந்தச் சின்னத்தில் போட்டியிட வேண்டும்” என்பதில் அவர் உறுதியாக இருந்திருக்கிறார்.

 

இந்தத் துரை வைகோவின் பிடிவாதம் என்பது கட்சியை வளர்ப்பதற்கல்ல, மாறாகத் தனது தனிப்பட்ட அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே என்பதுதான் தொண்டர்களின் குமுறல். வாரிசு அரசியலை எதிர்த்துத் தான் ஒரு காலத்தில் வெளியே வந்த வைகோ, இன்று தன் மகனுக்காகக் கட்சியையே திமுகவிடம் அடமானம் வைப்பதைப் பார்த்து, “ஐயா… நீங்கள் அன்று பேசியதெல்லாம் வெறும் பேச்ச்தானா?” என்று தொண்டர்கள் நெஞ்சு வெடிக்கக் கேட்கிறார்கள். மகனின் ஒரு ‘சீட்’டுக்காக, ஒட்டுமொத்தக் கட்சியின் அடையாளத்தையும் விட்டுக் கொடுக்கத் துணியும் வைகோவின் செயல்பாடு, மதிமுகவின் முதுகெலும்பையே உடைத்துவிட்டது.

 

4 தொகுதியும் நசுக்கப்பட்ட மதிமுகவும்!

 

வைகோ தரப்பில் “ஒரு தொகுதியில் சொந்தச் சின்னத்தில் போட்டியிடுகிறோம்” என்று பிடிவாதம் பிடித்த பிறகு, திமுக தரப்பிலிருந்து வந்த பதில் இடி போல இருந்தது. “அப்படியானால் உங்களுக்கு நான்கு தொகுதிகள் மட்டும்தான்” என எண்ணிக்கையைக் குறைத்துவிட்டதாம் திமுக தலைமை. இது வெறும் மதிமுகவுக்கான எச்சரிக்கை மட்டுமல்ல, கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளான சிபிஐ, சிபிஎம், தேமுதிக மற்றும் விசிக ஆகியோருக்கும் விடப்பட்ட மறைமுக மிரட்டல்தான் என்கிறார்கள்.

 

மதிமுகவுக்கே இந்த கதி என்றால், மற்ற கட்சிகளின் கதி என்னவாகும் என்கிற அச்சம் கூட்டணியில் நிலவுகிறது. திருமாவளவன் தலைமையிலான விசிகவும், இடதுசாரிகளும் எத்தனை தொகுதிகளைப் பெறப்போகிறார்கள் என்பது இப்போது பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. திமுகவின் இந்த ‘பிக் பிரதர்’ மனப்பான்மை, சிறிய கட்சிகளை மெல்ல மெல்ல விழுங்கும் ஒரு ராஜதந்திரமாகவே பார்க்கப்படுகிறது.

மதிமுகவின் ‘பலி’ ஆடு யார்?

 

மதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் இப்போது புலம்பித் தள்ளுகிறார்கள். “கட்சியை வளர்க்க நாங்கள் இரவு பகலாக உழைக்கிறோம், ஆனால் பலன் என்னவோ வாரிசுக்கு மட்டுமா?” என்கிற வேதனை அவர்களிடம் ததும்பி நிற்கிறது. ஒரு பக்கம் சின்னம் இல்லை, இன்னொரு பக்கம் தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைவு. இந்த லட்சணத்தில் களமிறங்கினால், தொண்டர்கள் எப்படித் தேர்தல் வேலை செய்வார்கள்?

 

வைகோ தனது மகனின் அரசியல் எதிர்காலத்திற்காக, பல தசாப்தங்களாகத் தன்னோடு நின்ற தியாகிகளைப் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார் என்பதே கசப்பான உண்மை. “பம்பரம் சுற்றப்போவதில்லை, அது உதயசூரியன் சின்னத்தின் அடியில் நசுங்கிச் சாகப்போகிறது” என்று சமூக வலைதளங்களில் மதிமுகவினரே விமர்சனம் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது.


மறைவா? மறுமலர்ச்சியா?

 

அரசியலில் எத்தனையோ மேடுபள்ளங்களைக் கண்டவர் வைகோ. ஆனால், இன்று அவர் சந்தித்திருக்கும் வீழ்ச்சி என்பது வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகவே அமையும். சொந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடக் கூடத் துணிவில்லாத ஒரு தலைமை, எதற்காகக் கட்சி நடத்த வேண்டும்? வாரிசு பாசத்தினால் கண்கள் மறைக்கப்பட்டு, தன் தொண்டர்களின் உணர்வுகளை மிதிக்கும் வைகோவின் இந்தச் செயல்பாடு, மதிமுகவின் இறுதிக் காலத்தை அறிவிப்பது போலிருக்கிறது.

 

திமுகவின் பிடியில் சிக்கி, சின்னத்தையும் இழந்து, செல்வாக்கையும் இழந்து நிற்கும் மதிமுக, இனி ‘மறுமலர்ச்சி’ அடையுமா அல்லது ‘மறைந்து’ போகுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்… வைகோவின் இந்த வாரிசு அரசியல் பிடிவாதம், சுயநலப் போக்கு மதிமுக எனும் கோட்டையைச் சரித்துவிட்டது என்பதுதான் இன்றைய சோகமான உண்மையாகும்.


 

Leave a Reply

Right Menu Icon