கட்சி தொடங்கலாமா? அறிவிப்பு எப்போது? புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் ரஜினி முக்கிய ஆலோசனை
புதிதாக கட்சி தொடங்குவது தொடர்பாக புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசியலில் குதிப்பது தொடர்பாக கால் நூற்றாண்டாக போக்கு காட்டி வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரசியலுக்கு வருவது உறுதி என தனது அறிவிப்பை இந்தாண்டு ஆரம்பத்தில் அறிவித்தார். அப்போது தாம் அரசியலுக்கு வந்தால் தமது கொள்கை என்னவாக இருக்கும் என்பதையும் Uட்டியலிட்டிருந்தார். கட்சி, ஆட்சிக்கு வெவ்வேறு தலைமை என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை ரஜினி வெளியிட்டதால் அவருடைய அரசியல் பிரவேசம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதனால் ரஜினி விரைவில் தனது கட்சியின் பெயரை அறிவித்து தீவிர அரசியலில் குதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக அமைதியாகி விட்டார். இருந்தாலும் கட்சி அறிவிப்பு வெளியிடுவது தொடர்பாக ரஜினி விரிவாக ஆலோசித்து வருவதாகவும், விஜயதசமி நாளான இன்று முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் சில நாட்களுக்கு முன் தகவல் கசிந்தது. ஆனால் இன்று அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
அதே நேரத்தில் இன்று ரஜினி நடத்திய முக்கிய சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது என்றே கூறலாம். புதிய நீதிக் கட்சியின் தலைவரும் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் பெரும் தொழிலதிபருமான ஏ.சி.சண்முகத்துடனான ரஜினியின் சந்திப்பு தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ரஜினியின் நண்பராகவும் திகழும் ஏசிஎஸ், இன்று போயஸ் இல்லத்தில் ரஜினியை தனியே சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பில் தமது அரசியல் கட்சி தொடங்குவது பற்றியே ஏ.சி. சண்முகத்துடன் ரஜினி முக்கியமாக ஆலோசித்திருக்கலாம் என்று தெரிகிறது.
ஏற்கனவே ஏ.சி.சண்முகத்துக்கு சொந்தமான கல்லூரியில் நடந்த விழா ஒன்றில் தான், தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது என்று முதன் முறையாக கூறி ரஜினி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் இன்றைய ரஜினி – ஏ.சி சண்முகம் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ரஜினியின் போயஸ் இல்லத்தில் வெகு நேரம் நீண்ட ஆலோசனை நடத்தி விட்டு வெளியில் வந்த ஏ.சி.சண்முகத்தை செய்தியாளர்கள் சூழ்ந்து கேள்வி எழுப்ப முயன்றன். ஆனால் ஒன்றும் பேசாமல் ஏ சி எஸ் காரில் விருட்டென எஸ்கேப் ஆனது ஏமாற்றமாகி விட்டது. இதனால் இந்த சந்திப்பு குறித்தும் என்ன பேசப்பட்டது என்பது குறித்தும் சஸ்பென்சாகவே உள்ளது. ரஜினி என்றாலே சஸ்பென்ஸ் தானே?





