விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நபர் மன்னிப்பு கோரியுள்ளார்..!
நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு மிக மோசமாக மிரட்டல் விடுத்த நபர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறை மையமாகக் கொண்ட 800 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான விஜய் சேதுபதி பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பின் காரணமாக அந்த படத்தில் இருந்து விலகினார்.
இதையடுத்து விஜய் சேதுபதியின் மகளுக்கு ரித்திக் என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து பாலியல் ரீதியில் மிக மோசமான மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் மிரட்டல் விடுத்தவர் இலங்கையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனால் சைபர் கிரைம் காவல்துறையினர் இன்டர்போலின் உதவியை நாடியுள்ளனர்.
இந்நிலையில் மிரட்டல் விடுத்த இலங்கையை சேர்ந்த இளைஞர் மன்னிப்பு கேட்டுள்ள வீடியோ ஐபிசி தமிழ் ஊடகத்தில் வெளியாகியுள்ளது. மனரீதியான பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். அவரின் தாயார் தங்களை மன்னிக்கும்படி விஜய்சேதுபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






