ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை..!
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தகுதி பெறுவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11&ஆம் தேதி வெளியிடப்பட்டு, நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வை 92,412 பேரும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கான இரண்டாம் தாள் தேர்வை 3 லட்சத்து 31,923 பேரும் எழுதினர். தேர்வு வாரியம் நினைத்தால் இந்தத் தேர்வுகளின் முடிவுகளை ஒரு மாதத்தில் வெளியிட்டு விட முடியும். ஆனால், தேர்வு நடந்து இரு மாதங்கள் முடிவடையும் நிலையில் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கு பொதுப்பிரிவினர் 60% (150&க்கு 90) மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 55% (150&க்கு 82) மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜனவரி 28ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி இட ஒதுக்கீட்டுப் பிரிவினரில் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 40% ஆகவும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கான தேர்ச்சி மதிப்பெண் 50% ஆகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 60 சதவீதத்திலிருந்து 50 சதவிதமாக குறைக்கக் கோரி 2010ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பொதுப் பிரிவை சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த மனுவில் பீகார் மாநிலத்தில் 50 சதவீதமாக குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது போல தமிழகத்திலும் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணபிக்க பொதுப் பிரிவு ஆசிரியர்களுக்கு 50 சதவீத மதிபெண்கள் மட்டுமே நிர்ணயித்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்கட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்கவில்லை என கூறியுள்ள மனுதாரர்கள், குறைந்தபட்ச மதிப்பெண்களை 50 சதவீதமாக குறைப்பது தொடர்பாக பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, பொதுப்பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த கொள்கை முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்க ஏதுவாக வழக்கு விசாரணையை ஜூலை 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.





