லிவர் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அபினவ்..!
லிவர் சிரோசிஸ் நோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர் அபினவ் சிகிச்சைக்கு பண உதவி கோரியுள்ளார். தனுஷ் ஹீரோவாக அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படம் மூலம் நடிகரானவர் அபினவ். அந்த படத்தை தொடர்ந்து ‘ஜங்ஷன்’ உட்பட சில படங்களில் ஹீரோவாகவும் இவர் நடித்தார்.
பின்னர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கிய இவருக்கு ஹீரோயினுக்கு பார்க்கப்படும் அமெரிக்க மாப்பிள்ளையாக நடிக்கும் சிறு காதாபாத்திரங்கள் மட்டுமே வந்தது. சரியான பட வாய்ப்பு இல்லாமல் திணறி வந்த இவர் இடையில் கிடைக்கும் விளம்பரங்களில் நடித்து வந்தார்.3 ரோஸஸ் விளம்பரத்தில் இவர் நடித்துள்ளார்.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் ‘ஜோடி நம்பர் 1’ பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் இவர் பங்கேற்றுள்ளார். ஹேண்ட்ஸம் லுக் இருந்த போதிலும் சினிமா இவருக்கு கை கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் முற்றிலுமாக சினிமா வாய்ப்பு இல்லாமல் போனது. அதன் பின் எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ அல்லது படங்களின் பக்கம் அவரை காணவில்லை.
இந்நிலையில் லிவர் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அபினவ் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆள் அடையாளமே தெரியாத வகையில் முற்றிலுமாக உடல் மெலிந்து வயிறு வீங்கி ஆள் எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்தவர்கள் ‘துள்ளுவதோ இளமை’ பட ஹேண்ட்ஸம் பாய் அபினவ்வா இது என ஷாக் ஆகிவருகின்றனர்.
மேல் சிகிச்சைக்கு மேலும் ரூ. 28 லட்சம் தேவைப்படுவதால் உதவி செய்யக்கோரி அபினவ் உருக்கமாக வெளியிட்டுள்ள வீடியோ பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.





