நீதித்துறை அதிகாரிகள் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது!
நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோருடன் இணைந்த முதல் டிவிஷன் பெஞ்சிற்குத் தலைமை தாங்கிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, தமிழ்நாட்டில் பணியாற்றும் நீதித்துறை அலுவலர்களின் (நீதிமன்ற நடுவர்கள், முன்சிப்கள், துணை நீதிபதிகள், அமர்வு நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகள்) ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 61 அல்லது 62 ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவு பரிசீலனையில் உள்ளது என்றும், இது குறித்து விரைவில் சாதகமான முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா அரசு 2023-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி அம்மாநில நீதித்துறை (சேவை மற்றும் பணியாளர்) விதிகளை அறிவிப்பதன் மூலம் நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக உயர்த்தியது டிவிஷன் பெஞ்சின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இத்தகைய உயர்வை வரவேற்ற உச்ச நீதிமன்றம், இது “நீதித்துறை அதிகாரிகளுக்கு நன்மை பயக்கும்” என்று குறிப்பிட்டது.
இதேபோல், ஆந்திரப் பிரதேசமும் அதன் நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 2024 நவம்பர் 1 முதல் 60-லிருந்து 61 ஆக உயர்த்தியது. இந்த முடிவு ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வின் (அனைத்து நீதிபதிகளையும் கொண்ட குழு) ஒப்புதலுடன் எடுக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள நீதித்துறை அதிகாரிகளும் 61 வயது வரை பணியில் தொடர 2025-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு மூலம் அனுமதி அளித்தது.
எனவே, சமத்துவத்தைக் கோரி, தமிழ்நாட்டில் பணியாற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு ஓய்வு பெறும் வயதை உயர்த்தக் கோரி மனுதாரர்கள் மார்ச் 26, 2026 அன்று சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகத் தரப்பிற்கு ஒரு இன்னும் ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகளில் 60 வயதை எட்டி ஓய்வுபெற உள்ள, திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ. முத்துசாரதா, சிவகங்கை முதன்மை மாவட்ட நீதிபதி கே. ஜெயக்குமார், பெரம்பலூர் மகிளா நீதிமன்ற நீதிபதி பி. இந்திராணி மற்றும் தேனி செஷன்ஸ் நீதிபதி ஜி. அனுராதா ஆகியோர் ரிட் மனு தாக்கல் செய்தனர்.
இதில், அனுபவம் வாய்ந்த நீதிபதிகளை நீண்ட காலப் பணிக்கு வைத்திருப்பது வழக்குகளை விரைவாக முடிக்க உதவும் என்று அவர்கள் கூறினர். தமிழ்நாட்டில் நீதித்துறை அதிகாரிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களில் 21 சதவீதம் காலியாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர்கள், ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் கனடா போன்ற வெளிநாடுகளில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 70 முதல் 75 வரை இருப்பதை எடுத்துரைத்தனர். “இந்தியாவில் கீழ்நிலை நீதித்துறையில் நீதித்துறை அதிகாரிகளுக்கான ஓய்வு பெறும் வயது 60 என்பது உலகிலேயே மிகக் குறைவான ஒன்றாகும்” என்று அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
இந்த ரிட் மனு மீது நடைபெற்ற விசாரணையில், மனுதாரர்களுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் தலைமை நீதிபதி கூறுகையில், “பிற உயர்நீதிமன்றங்கள் எடுத்துள்ள முடிவுகளைத் தெரிந்துகொள்ள நாங்கள் (சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகம்) விவரங்களைக் கேட்டுள்ளோம். நாங்களும் ஒரு முடிவை எடுப்போம். தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்கள் ஏற்கனவே இதனைச் செய்துள்ளதால், பெரும்பாலும் இது நடைமுறைப்படுத்தப்படும். இது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, 4 மனுதாரர்களும் தங்கள் ரிட் மனுவைத் திரும்பப் பெறவும், கடந்த மாதம் உயர்நீதிமன்ற நிர்வாகத்திடம் அளித்த கோரிக்கையைத் தொடரவும் டிவிஷன் பெஞ்ச் அனுமதி அளித்தது. எதிர்காலத்தில் ஏதேனும் தேவை ஏற்பட்டால், மீண்டும் நீதிமன்றத்தை அணுகும் உரிமையுடன் இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதி வழங்கப்பட்டது.
மனுதாரர்கள் தங்கள் பிரமாணப் பத்திரத்தில், நீதித்துறை அதிகாரிகளின் சேவை நிபந்தனைகளில் சீரான தன்மை இருக்க வேண்டியதன் அவசியத்தை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர். 1992-ம் ஆண்டு அகில இந்திய நீதிபதிகள் சங்க வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றும் 1993, 2002-ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட முடிவுகளை சுட்டிக்காட்டிய நிலையில’, நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையும், ஊதியம், படிகள் மற்றும் சேவை நிபந்தனைகள் குறித்த முதல் தேசிய நீதித்துறை ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டதையும் மனுதாரர்கள் குறிப்பிட்டனர்.





