--- --:--:-- --

அதிமுக ஆட்சியில் விலைவாசி ஏறிப்போச்சு! பட்டியல் வாசித்து ஸ்டாலின் பிரசாரம்!

stalin 05

விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாத ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், நீட் தேர்வை நாங்கள் உள்ளே விட மாட்டோம் என்று சொன்னார்கள். இதுவரையில் அது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறதா? அனிதா தொடங்கி பல பேர் அந்த நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள்.

 

இந்த நீட் தேர்வுக்காக சட்டப்பேரவையில் நாங்கள் தீர்மானமே போட்டோம். இதுவரையில் அது என்ன நிலையில் இருக்கிறது? என்று மத்திய அரசிடம், மாநில அரசு கேட்கத் தயாராக இல்லை. அவர்கள் கைகட்டி அடிமை ஆட்சியைத் தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 

கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டவற்றை நான் பட்டியலிடுகிறேன். இதேபோல, முதல்வர் பழனிசாமி தான் செய்தவற்றைப் பட்டியல் போட்டுச் சொல்வதற்குத் தயாராக இருக்கிறாரா? ஆளுங்கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.

 

செய்ய முடியாத காரியங்களை, வாய்க்கு வந்தபடியெல்லாம், பொத்தாம் பொதுவாக பல உறுதிமொழிகளைச் சொல்லி இருக்கிறார். அதில் எது நடக்கும் எது நடக்காது என்று மக்களுக்குத் தெரியும். ஏற்கெனவே 2011, 2016 தேர்தல் உறுதிமொழிகளின் நிலை என்ன? அனைவருக்கும் செல்போன் இலவசமாகக் கொடுப்போம் என்று சொன்னார். அதை இப்போதும் சொல்லி இருக்கிறார். இங்கு இருக்கும் யாருக்காவது அதிமுக ஆட்சியில் இலவசமாக செல்போன் கொடுத்து இருக்கிறார்களா?

 

கேபிள் கட்டணத்தை 70 ரூபாய்க்குக் குறைப்போம் என்று ஒரு உறுதிமொழி கொடுத்தார்கள். குறைத்திருக்கிறார்களா? பொது இடங்களில் வைஃபை வசதி செய்து கொடுப்போம் என்று சொன்னார்கள். கொடுத்திருக்கிறார்களா? 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று சொன்னார்கள். எவ்வளவு லட்சம் வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன?

 

இன்றைக்கு விலைவாசி என்ன நிலையில் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். ஆவின் பால் லிட்டர் 25 ரூபாய்க்கு தருவோம் என்று சொன்னார்கள். இப்போது 60 ரூபாய். உளுத்தம் பருப்பு திமுக ஆட்சியில் ஒரு கிலோ 60 ரூபாய் – இப்போது 120. துவரம் பருப்பு திமுக ஆட்சியில் ஒரு கிலோ 38 ரூபாய் – இப்போது 120.

 

கடலை பருப்பு திமுக ஆட்சியில் ஒரு கிலோ 34 – இப்போது 150. சர்க்கரை ஒரு கிலோ திமுக ஆட்சியில் 18 – இப்போது 40. சிலிண்டர் ஒன்று திமுக ஆட்சியில் 400 – இப்போது 900. விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாத ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்று ஸ்டாலின் பேசினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon