--- --:--:-- --

‘துருப்புச்சீட்டாக’ அழகிரி! ‘தூக்கிப்பிடிக்க’ ரஜினி!! அமித்ஷா தமிழக வருகையின் அதிரடி பின்னணி!!

stye

ள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார் என்ற தகவல், அரசியல் கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அழகிரியை துருப்புச்சீட்டாக்கி திமுக வாக்குகளை பிரிப்பது; ரஜினியை தங்கள் பக்கம் இழுப்பது என்ற திட்டத்துடன் அவர் வருவதாக கூறப்படும் நிலையில், அதிமுக, திமுக இரண்டும் கவலையில் ஆழ்ந்துள்ளன.

 

அண்மையில் நடந்த பீகார் சட்டசபைத் தேர்தலில், மூன்றாம் முறையாக நிதீஷ்குமாரின் ஐக்கியஜனதாதளம் – பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. பொதுவாக இரண்டு முறை ஆட்சியில் இருந்தாலே, மூன்றாம் முறை ஆளுங்கட்சி மீது அதிருப்தி இருக்கும்; எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு தரவே மக்கள் பொதுவாக ஆர்வம் காட்டுவார்கள்.

 

ஆனால், பீகார் தேர்தலில் கருத்து கணிப்புகளுக்கு மாறாக, பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடித்தது. வெற்றி நூலிழையில்தான் கிடைத்தாலும், வெற்றி வெற்றிதானே. இதற்கு முக்கிய காரணம், பாஜகவின் சாணக்கியர் என்று கருதப்படும் அமீத்ஷா வகுத்த வியூகங்கள் தான்.

 

அவரது திட்டப்படி தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இருந்து, லோக்ஜனசக்தி விலகிச் சென்றது; ஓவைஸியை சுற்றியிருந்த கூட்டம் போட்ட தூபத்தால், அவரும் கூட்டணி வைக்காமல் தனித்து களமிறங்கினார். இதனால் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறின; திட்டமிட்டபடி அந்த கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடித்தது.

 

பீகார் தேர்தல் முடிந்ததை அடுத்து பாஜகவின் கவனம், மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் இம்முறை எப்படியும் பாஜக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது அமித்ஷாவின் கண்டிப்பான உத்தரவாம்; அதனால்தான் வேல் யாத்திரை என்ற பெயரில் கள்மிறங்கிவிட்டார், தமிழக பாஜக தலைவர் முருகன்.

 

அமித்ஷாவின் திட்டம் ?

அத்துடன், அமித்ஷாவும் ரகசிய காய் நகர்த்தல்களுடன் தமிழகம் வந்து ஆலோசனை நடத்துகிறார். அமித்ஷாவின் திட்டத்தின்படி, திமுகவுக்கு விழும் வாக்குகளை பிரிப்பதாகும். அதன்படி, அரசியல் இருந்து ஒதுங்கி இருக்கும் மு.க. அழகிரியை மீண்டும் ஸ்டாலினுக்கு எதிராக கொம்பு சீவிவிடுவது, அமித்ஷாவின் திட்டமாம்.

 

அழகிரியும், தி.மு.க.வில் மீண்டும் இணைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் இரண்டு வருடங்களாக காத்திருந்தார். அவரை இணைத்துக்கொள்ள கலைஞர் குடும்பமும் முயன்று பார்த்தாலும், ஸ்டாலின் குடும்பத்தினர், அழகிரிக்கு நோ சொல்லிவிட்டனர். இதனால், ஸ்டாலின் மீதான அழகிரியின் கோபம் பலமடங்கு அதிகரித்துள்ளது.

 

அதேநேரத்தில், தி.மு.க.வை பொருத்தமட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அழகிரியின் கோபம், அதிருப்தி திமுகவினரின் ஏக்கம் இரண்டையும் மனதில் கொண்டு, அழகிரியை ஸ்டாலினுக்கு எதிராக கட்சித் தொடங்கச் செய்வது அமித்ஷா போட்டுத்தந்த திட்டம் என்று பேசிக் கொள்கிறார்கள்.

 

மு.க.அழகிரியை தனிக்கட்சி ஆரம்பிக்க வைப்பதன் மூலம் தி.மு.க.வின் அதிருப்தியாளர்களை வெளியே கொண்டு வர முடியும்; அவர்களுக்கு அழகிரி அடைக்கலம் தந்து ஒருங்கிணைக்க முடியும். இதன் மூலம் தி.மு.க.வின் வாக்கு வலிமையை குறையும் என்பது, அமித்ஷாவின் திட்டமாம்.


தூக்கிப்பிடிக்க’ ரஜினி

 

அத்துடன் பாஜக – அழகிரி- ரஜினி ஆகியோரை ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வருவது என்ற யோசனையும் அமித்ஷாவிடம் இருக்கிறதாம். ரஜினிக்கு பாஜகவிடமும் நல்ல நட்பு உள்ளது; அழகிரியுடனும் நெருக்கம் உள்ளது. தீபாவளியின் போது, ரஜினியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ள அழகிரி, அரசியலை பற்றி மனம் விட்டுப் பேசியிருக்கிறார்.

 

அதன் பிறகுதான், அரசியலே வேண்டாம் என்று இதுவரை துறவறம் பூண்டிருந்த அழகிரி, கட்சி தொடங்கும் யோசனைக்கு வந்துள்ளார் என்கிறார்கள். ஸ்டாலினுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற அழகிரி மனதிற்குள் எரிந்து கொண்டிருக்கும் கோபம் தான் இதற்கு காரணம்.

 

எனவே, தனிக்கட்சி தொடர்பாக வரும் 20ம் தேதி அனைத்து நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை மு.க. அழகிரி கூட்டியுள்ளார்.இந்த ஆலோசனைக்கு பிறகு, புதிய கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார். கலைஞர் திமுக என்ற கட்சியை அவர் ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாக, பேச்சு அடிபடுகிறது.

 

அழகிரி ஆலோசனை நடத்தும் அதே நாளில்தான் அமித்ஷாவும் தமிழகத்திற்கு வருகை தருகிறார். தேர்தல் வெற்றிக்கான வழிகள் குறித்து தமிழக பா.ஜ.க.வினருடன், அவர் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

 

தி.மு.க.வின் வெற்றியைத் தடுப்பது, ரஜினியின் ஆதரவை பெறுவது ஆகியன அவரது பயணத்தின் முக்கிய அஜெண்டா என்று பாஜக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. தி.மு.க.வின் வாக்கு வலிமையை சேதாரப்படுத்தினால், அது பாஜகவிற்கு ஆதாரமாகும் என்பது அவரது கணக்காம். அதற்கான அமித்ஷாவின் துருப்புச்சீட்டுதான் அழகிரி என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 

தமிழகப் பயணத்தின் போது நடிகர் ரஜினியையும் அமைச்சர் அமித்ஷா சந்திக்கிறார். அரசியல் கட்சி தொடங்குவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ள ரஜினிக்கு, அமித்ஷா சில யோசனைகளை வழங்கி, தனது வழிக்கு கொண்டு வரும் திட்டம் உள்ளதாம்.

திமுகவிற்கு தான் பாதிப்பு

 

அமித்ஷா வருகை, ரஜினியுடன் சந்திப்பு, அழகிரியின் ஆலோசனை என அடுத்தத்தடுத்த அரசியல் காய் நகர்த்தல்கள், மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள், ஆளும் அதிமுக மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அழகிரி கட்சி தொடங்கினால், நிச்சயம் திமுகவிற்கு தான் பாதிப்பு; குறிப்பாக தென் மாவட்டங்களில் திமுகவின் வெற்றியை அது கேள்விக்குறியாக்கிவிடும் என்பதை ஸ்டாலின் உணர்ந்துள்ளார். எனவே, அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று ஆலோசிப்பதற்காக, வரும் 23ஆம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தை ஸ்டாலின் கூட்டியுள்ளார்.

 

மொத்தத்தில், அமிஷாவின் தமிழகப் பயணம், அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது; அவர் வந்து சென்ற பிறகு என்ன மாற்றங்கள் நிகழுமோ என்பதே, அரசியல் நோக்கர்கள் ஆர்வத்துடன் உற்று நோக்கி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon