சிவகங்கை மாவட்டத்தில் பிராய்லர் கோழி வளர்ப்பது நிறுத்தம்! பண்ணை உரிமையாளர்கள் முடிவு! சுமூக தீர்வு ஏற்படுத்திட மாவட்ட ஆட்சியரிடம் மனு.!
தமிழகம் முழுவதும் பிராய்லர் கோழி குஞ்சுகளை வழக்கும் பண்ணைகள் குடிசைத் தொழிலாக இருந்து வருகிறது. பெரிய கோழி நிறுவனங்கள், கோழி பண்ணை உற்பத்தியாளர்களிடம் குஞ்சுகளை கொடுத்து அதற்குத் தேவையான தீவனங்கள் மற்றும் மருந்துகளை வழங்கி, பின்னர் கோழியாக வளர்ந்த பின்பு பராமரிப்பு செலவாக குறிப்பிட்ட தொகையினை கொடுத்து கோழிகளை எடுத்துச் செல்வது வழக்கம்.
இதில் பராமரிப்பு செலவாக கொடுக்கப்படும் தொகை மிகக் குறைவு என பல வருடங்களாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் கோழி நிறுவனங்களிடம் கூடுதல் தொகை வழங்கக்கோரி கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து இவர்களது கோரிக்கை ஏற்கப்படததால், தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கங்கள் அமைத்து நவம்பர் 1ஆம் தேதி முதல் கோழிக்குஞ்சுகளை பெரு நிறுவனங்களில் இருந்து வாங்குவதை நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தங்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கக்கோரியும் பெரிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று சுமூக தீர்வினை ஏற்படுத்திட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம், சிவகங்கை மாவட்ட கறிக் கோழிப்பண்ணையாளர்கள் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.






