--- --:--:-- --

பாஜகவில் இணைந்தார் குஷ்பூ.. நாட்டை சரியான பாதையில் வழிநடத்துவதாக பிரதமர் மோடிக்கு பாராட்டு

பாஜகவில் இணைந்தார் குஷ்பூ.. நாட்டை சரியான பாதையில் வழிநடத்துவதாக பிரதமர் மோடிக்கு பாராட்டு

காங்கிரசில் இருந்து விலகிய நடிகை குஷ்பூ, டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி என குஷ்பூ தெரிவித்துள்ளார்.

 

தமிழ் திரையுலகில் 1990 கால கட்டத்தில் ரஜினி உள்ளிட்ட பிரபலங்களுடன் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்ற குஷ்பூ, கடந்த 2010-ல் திமுகவில் இணைந்து அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளராக மாறினார். பின்னர் திமுகவில் ஏற்பட்ட கசப்பு காரணமாக கடந்த 2014-ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

 

அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் என்ற பதவியில் இருந்தார். சமீப காலமாக காங்கிரசும் அவருக்கு கசந்து விட்டது போலும். இதனால் பாஜகவில் இணையப் போகிறார் என்ற செய்திகள் கடந்த ஒரு வருடமாகவே பரபரத்தன. ஆனால் அதனை குஷ்பூ மறுத்தே வந்தார். பாஜக தரப்பிலோ குஷ்பூவை கட்சியில் இணைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வந்ததாகவே கூட செய்திகள் வெளியாகின.

 

இந்நிலையில் குஷ்பூ நேற்று இரவு திடீரென டெல்லிக்கு பறந்தது முதலே அடுத்தடுத்து Uரபரப்பு காட்சிகள் அரங்கேறின. பாஜகவில் இணைய முடிவெடுத்தே அவர் டெல்லிக்கு பயணம் என தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து இன்று காலை முதலே அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகள் அரங்கேறத் தொடங்கின.

 

குஷ்பூ பாஜகவில் இணைவது உறுதி என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட காங்கிரஸ் மேலிடம், அவரை தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்தது. அடுத்த சில நிமிடங்களில் தாம் காங்கிரசில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுவதாக கூறி அக் கட்சியின் தலைவர் சோனியாவுக்கு, குஷ்பூ கடிதம் எழுதிய தகவல் வெளியானது. ரொம்பவே யோசித்து இந்த முடிவை எடுத்ததாகவும், கட்சியில் களப்பணியாற்றுபவர்களை, பொறுப்பில் உள்ள தலைவர்கள் மதிப்பதில்லை என்றும் கடிதத்தில் குஷ்பூ குறை கூறியிருந்தார்.

 

தொடர்ந்து எதிர்பார்த்தபடியே இன்று பிற்பகல் பாஜக தலைமை அலுவலகத்தில் குஷ்பூ ஆஜரானார். அங்கு பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, தமிழக தலைவர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் குஷ்பூ பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக உறுப்பினர் அட்டையை சி.டி.ரவி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ, நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி என புகழ்ந்தார். மேலும்பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், பாஜகவில் சிறப்பாக செயல்படுவேன் என்றும் தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற பாடுபடுவேன் எனவும் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon