ஆலையை திறக்க உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு… ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு!!
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கஉயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசு, பொது மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை நடத்தினர். கடந்த 2018 மே 22-ந் தேதி பொதுமக்கள் நடத்திய மிகப்பெரும் போராட்டம், வன்முறையாக மாறியது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

2 ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. அதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவையும் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் , சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.







