இனி மாதம் ரூ.2500.. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து மகளிர் உரிமை தொகை..!
கடந்த திமுக ஆட்சியில் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் நடைமுறைக்கு வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியுள்ள குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.1,000 நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
தமிழகத்தை தொடர்ந்து இந்த திட்டம் மற்ற மாநிலங்களிலும் தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டு, வரவேற்பை பெற்றது. தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார் விஜய்.
அந்த வகையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்துள்ளது. ஆனால், தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு குடும்ப தலைவிகளிடையே எழுந்துள்ளது.
இதையடுத்து பட்ஜெட் தாக்கல் தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மரிய வில்சன், அமைச்சரவைக் கூட்டமும் நன்றாக முடிந்தது. தொடர்ந்து தவெக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும். ஊழலுக்கு எதிரான முதலமைச்சரின் நடவடிக்கைக்கு 100 சதவீத மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
எங்கள் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றார். இதன் மூலம் வரும் பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகைக்கு தனியாக பட்ஜெட் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






