மதுக்கடைகளில் இன்னும் கொரோனா தென்படவில்லையோ?சென்னையில் டாஸ்மாக் கடை திறப்பு குறித்து கமல் டுவீட்!!
எங்கெங்கு காணினும் கொரோனா என்ற நிலையில், மதுக்கடைகளில் இன்னும் கொரோனா தென்படவில்லையோ? அதனால் தான் சென்னையில் சாராய அணைக் கட்டுகளின் மதகுகள் திறக்கப்படுகிறதோ? என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தமிழக அரசை சாடியுள்ளார்.
கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக கடந்த 5 மாதங்களாக சென்னையில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நாளை முதல் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பும், கண்டனம்ம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா தொற்று பரவல் இன்னமும் உச்சத்தில் உள்ள நிலையில், மக்கள் மேல் கொஞ்சமும் அக்கறை இல்லாத அரசு என சாடியுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள், வருமானம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதா? என கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனும், வழக்கமான தனது பாணியில், சென்னையில் டாஸ்மாக் திறப்பு குறித்து தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக கமலஹாசன் தமது டுவிட்டர் பக்கத்தில்,
சென்னையில் காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கொரோனா, பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது.
மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்? என்று கேள்வி எழுப்பி தனது எதிர்ப்பை கமலஹாசன் பதிவிட்டுள்ளார்.







