கோவை மாமன்றத்தில் பரபரப்பு: 40 கோடி ஊழல் புகார் எழுப்பிய பெண் கவுன்சிலர் ‘சேலையைப் பிடித்து இழுத்து, திமுகவினர் தாக்குதல்!
கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் செம்மொழிப் பூங்கா திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டிய காங்கிரஸ் பெண் கவுன்சிலர் காயத்ரி, திமுக பெண் கவுன்சிலர்களால் குண்டுகட்டாகப் பிடித்து இழுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாமன்றத்தில் வெடித்த ஊழல் விவாதம்
கோவை மாநகராட்சியின் 100 வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கான தீர்மானம் கடந்த காலத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான நாளிதழ் செய்தி ஒன்றின் அடிப்படையிலும், கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற தணிக்கை (Auditing) அறிக்கையில் உள்ள குளறுபடிகளை அடிப்படையிலும் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி கேள்வி எழுப்பினார்.
செம்மொழிப் பூங்கா திட்டத்தில் ஒப்பந்ததாரருக்குப் பில் பாஸ் செய்வதில் 40 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு மற்றும் ஊழல் நடந்திருப்பதாக மேயர் மற்றும் ஆணையாளரை நோக்கி அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தள்ளுமுள்ளு மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டு
காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவாதம் முற்றிய நிலையில், திமுக பெண் கவுன்சிலர்கள் காயத்ரியை மேடை நோக்கிச் செல்ல விடாமல் தடுத்தனர்.
செய்தியாளர்களிடம் கண்ணீருடன் பேசிய கவுன்சிலர் காயத்ரி தெரிவித்ததாவது:
“நான் மக்களின் பிரதிநிதியாக ஊழல் குறித்து கேள்வி எழுப்பப் போனேன். ஆனால், திமுக பெண் கவுன்சிலர்கள் எனது கையைப் பிடித்து இழுத்து, சேலையைக் கலைத்து அவமதித்தனர். மேலும், எனது கழுத்தைப் பிடித்து மாமன்றக் கூட்டத்திலிருந்து குண்டுகட்டாக வெளியே தள்ளினர்.”
முன்னாள் மேயர் வெங்கடாசலத்தின் மகளான காயத்ரிக்கு மாமன்றக் கூட்டத்திற்குள்ளேயே நேர்ந்த இந்த அவமரியாதை, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் ஆதிக்கம்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் இன்னும் நடத்தப்படாத சூழலில், கோவை மாநகராட்சியில் முந்தைய உள்ளாட்சி அமைப்பில் இருந்த பெரும்பாலான மேயர், நகராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் திமுகவைச் சேர்ந்தவர்களாகவே நீடிப்பதால், தற்போதும் உள்ளாட்சி அளவில் திமுகவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதனால் தான் ஊழல் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கவுன்சிலருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாகத் திரண்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.
திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி, அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி, தற்போது தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து சட்டமன்றத்திலும், அமைச்சரவையிலும் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.
இந்த சூழலில், உள்ளாட்சி அளவில் திமுகவின் பெரும்பான்மையால் தனக்கு நேர்ந்த இந்த அநீதியையும், 40 கோடி ஊழல் விவகாரத்தையும் தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப் போவதாகக் கவுன்சிலர் காயத்ரி ஆதங்கத்துடன் செய்தியாளர்களிடம் பதிவு செய்துள்ளார்.
ஆளும் தவெக-காங்கிரஸ் அமைச்சரவைக் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் ஒருவர் மீது, உள்ளாட்சியில் ஆதிக்கம் செலுத்தும் எதிர்க்கட்சியான திமுகவினர் நடத்திய இந்தத் தாக்குதல் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.







