--- --:--:-- --

“எடப்பாடியார் தான் என்றும் முதல்வர்..!!” செல்லூர் ராஜுவின் கருத்துக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி “கர்ஜனை”!! அதிமுகவில் “குஸ்தி” ஆரம்பிச்சாச்சு..!

sdrtsdr

ட்டசபை பொதுத் தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் முட்டல் மோதல் , குஸ்தி ஆரம்பித்து விட்டது. தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏக்கள் மூலமே முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று திருவாய் மலர்ந்து இந்தப் பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போட்ட மறுநாளே, அதெல்லாம் இல்லை… அண்ணன் எடப்பாடியார் தான் என்றும் முதல்வர் என வீராவேசமாக தனது பாணியில் கர்ஜித்துள்ளார் மற்றொரு அமைச்சரான ராஜேந்திர பாலாஜி.

 

இதனால் அதிமுகவில் இன்னும் யார் ? யாரெல்லாம் என்னென்ன மாதிரி கருத்தைக் கூறி கலகமூட்டப் போகிறார்களோ? என்ற எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியுள்ளது.

 

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஆறேழு மாதங்களே உள்ள நிலையில், ஆளும் அதிமுகவும், எதிர்க் கட்சியான திமுகவும் இப்போதே மல்லுக்கட்டுக்கு தயாராகி வருகின்றன.கடந்த அரை நூற்றாண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில், ஆட்சியைப் பிடிப்பதில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் நேரடிப் போட்டியாகவே இருந்து வருகிறது.

 

இதில் 50 ஆண்டுக்கும் மேலாக போட்டியில் முக்கியப் பங்கு வகித்தவர் கருணாநிதி தான். முதலில் 1977 முதல் 1984 வரை 3 சட்டசபை பொதுத் தேர்தலில்எம்.ஜி.ஆர் VS கருணாநிதி என போட்டி இருந்தது. ஆனால் எம்ஜிஆரை ஒரு முறை கூட கருணாநிதியால் வெல்ல முடியவில்லை. பின்னர் 1989 தேர்தல் முதல் கடைசியாக 2016-ல் நடைபெற்ற 7 பொதுத் தேர்தல்களில் கருணாநிதி VS ஜெயலலிதா மோதலாக இருந்தது. இதில் 1989,96, 2006-ல் கருணாநிதியும், 1991,2001, 2011, 2016ல் ஜெயலலிதாவும் முதல் வரானார்கள்.

 

குழப்பமோ குழப்பம்

கடைசியாக நடந்த 2016 தேர்தலில் முதல்வர் பதவிக்கு மல்லுக்கட்டிய ஜெயலலிதாவும் கருணாநிதியும் தற்போது இல்லை. இதனால் வரும் 2021-ல் நடைபெற உள் தேர்தல் வித்தியாசமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுக இரு கட்சிகளும் மிகப் பெரும் ஆளுமைகள் இல்லாத நிலையில் தேர்தலை சந்திக்க உள்ளன. இதனால் இரு தரப்பிலும் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற விவாதங்களும் இப்போதே தொடங்கி விட்டன.

 

இதில், இப்போது எதிர்க் கட்சியாக உள்ள திமுக தரப்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் எந்தவித மாற்றமுமில்லை. கட்சியில் அவருக்கு யாரும் போட்டியாகவும் இல்லை என்பது கண்கூடான உண்மை.ஆனால் ஆளும் கட்சியான அதிமுகவில் தான் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் குழப்பமோ குழப்பம் தொடர்கிறது . ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிர்ஷ்டவசமாக திடீர் முதல்வரானவர்தான் எடப்பாடி பழனிசாமி.

 

எப்படியோ பல பிரச்னைகளை எளிதில் கடந்து முதல்வர் பதவியை கெட்டியாக தக்கவைத்து வருகிறார் எடப்பாடி .ஆனால் வரும் பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? அல்லது வேறு ஒருவர் முன்னிருத்தப்படுவாரா? என்ற கேள்வி இப்பொழுதே எழத் தொடங்கி இருக்கிறது.

இன்னும் இரு அணிகள்

ஏனெனில் அதிமுகவில் இப்போது ஒற்றைத் தலைமை கிடையாது. கட்சிக்கு ஓபிஎஸ்சும், ஆட்சிக்கு இபிஎஸ்சும் தலைமை வகிக்கின்றனர். இதனால் முதல்வர் வேட்பாளர் என்று வரும் போது இருவருமே தங்களை முன்னிறுத்த முயல்வது உறுதி என்றே கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக கடந்த ஆண்டே கேள்வி எழுந்த போது, கட்சியே முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யும் என்று அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூறியிருந்தனர். இதனால் முதல்வர் பதவியை ஓபிஎஸ்சும் குறி வைப்பதாக கூறப்பட்டது. ஓபிஎஸ், இபிஎஸ் இரு தரப்பும் ஒன்றாக செயல்படுவது போல் வெளியில் காட்டிக் கொண்டாலும், தமிழகம் முழுவதும் இன்னும் இரு அணிகளாகவே பிரிந்து கிடக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.

 

இந்த நிலையில் தான் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுகவை இரு தலைவர்கள் வழிநடத்துகிறார்கள். எனவே தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூடி யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ, அவரே அடுத்த முதல்வர் என்று கூறியிருந்தார். செல்லூர் ராஜு கூறியபடி, முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் அதிமுக தேர்தலை சந்திக்கும் பட்சத்தில், வேட்பாளர் தேர்விலேயே ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளிடையே கோஷ்டி மோதல் உச்சகட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போதே அதிமுகவில் குஸ்தி தொடங்கி விட்டதாக தெரிகிறது.

 

செல்லூர் ராஜூ கூறிய கருத்துக்கு பதிலடி தருவது போல, வீராவேசமாக கடிக்கடி சர்ச்சை கருத்துக்களை கூறும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அண்ணன் எடப்பாடியார் தான் என்றும் முதல்வர் என சிங்கம் போல இன்று கர்ஜித்துள்ளார்.

 

இது தொடர்பாக டுவிட்டரில் ராஜேந்திர பாலாஜி இப்படி பதிவிட்டுள்ளார்.

 

“எடப்பாடியார் என்றும் முதல்வர்! இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைப்போம்! களம் காண்போம்! வெற்றி கொள்வோம்! 2021-ம் நமதே!”

 

மீண்டும் ஒரு தர்மயுத்தமா?

என்ற ராஜேந்திர பாலாஜியின் பதிவு அதிமுகவுக்குள் இரு தரப்பு மோதலுக்கு தூபம் போட்டது போல் புயலை கிளப்ப தயாராகியுள்ளது. இதனால் இனி முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அதிமுகவில் அடுத்து யார் ? என்ன சர்ச்சை கருத்துக்களை கூறி கட்சிக்குள் கலகம் விளைவிக்கப் போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

இதனால் தமிழக அரசியல் களத்தில் மட்டுமின்றி அதிமுகவிலும் பல்வேறு சுவாரஸ்யமான சங்கதிகளையும் ரசிக்கலாம் என்றே பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுகவில் மீண்டும் ஒரு தர்மயுத்த காட்சிகளும் அரங்கேறினாலும் ஆச்சர்யமில்லைதான்.

Leave a Reply

Right Menu Icon