மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது..! நான்கே நாளில் 30 அடி உயர்ந்தது!!
கனமழையால் கர்நாடக அணைகள் நிரம்பிய நிலையில், அதிகளவு உபரி நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து 95 அடியை தாண்டியுள்ள நிலையில், இன்று இரவுக்குள் 100 அடியை எட்டவுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 30 உயர்ந்துள்ள நிலையில் இந்த ஆண்டும் மேட்டூர் அணை நிரம்பி வழியும் என்பதால் டெல்டா விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு வழக்கமான குறிப்பிட்ட தேதியான ஜுன் 12-ந் தேதி திறக்கப்பட்டது. அப்போது 100 அடிக்கும் மேல் மேட்டூர் அணையில் நீர் இருப்பு இருந்ததால் நீர் திறப்பு சாத்தியமாயிற்று. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் வழக்கமாக பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவ மழை ஏமாற்றியதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிந்து, கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி 65 அடிக்கு கீழ் சரிந்தது.
இந்நிலையில் தான் கடந்த ஒரு வாரமாக கர்நாடகத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள கபினி, கேஆர்எஸ் / ஹாரங்கி உள்ளிட்ட அணைகள் ஓரிரு நாளிலேயே நிரம்பின. இந்த அணைகளில் இருந்து உபரி நீர் அதிகளவு வெளியேற்றப்பட்டதால் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் வெள்ளமென பாய்ந்து வந்தது. இதன் விளைவாக கடந்த நான்கு நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on Xநீர் இருப்பு 58.67 டிஎம்சி
அதிக நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 95.10 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் நேற்று 86 அடியாக இருந்த நீர் மட்டம் ஒரே நாளில் 9 அடி அதிகரித்த நிலையில் இன்று இரவுக்குள் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் வரத்து இன்று 80 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 58.67 டிஎம்சியாக உள்ள நிலையில் பாசனத்துக்காக 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கடந்த ஆண்டும் இதே மாதிரி ஆகஸ்ட் மாதத்தில் காவிரியில் நீர்வரத்து திடீரென அதிகரித்து மேட்டூர் அணை நிரம்பி வழிந்தது. பல நாட்களாக முழு கொள்ளளவான 120 அடியிலேயே நீர்மட்டம் இருந்தது. அதே போன்று இந்தாண்டும் மேட்டூர் அணை விரைவில் நிரம்பும் சூழல் உள்ளதால் டெல்டா விவசாயிகள் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.






