போலி இ – பாஸ் வழங்கியதாக கோவையில் ஜெராக்ஸ் கடைக்கு ” சீல் “.இதுபோல் மேலும் போலி இ – பாஸ் வழங்கப்பட்டுள்ளதா ? என போலீசார் விசாரணை !!!
கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் மணிவண்ணன்.இவர் மாவட்ட நிர்வாகம் வழங்கும் இ – பாஸ் பெற்று கொண்டு விருதுநகர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது,விருதுநகர் காவல் துறையினர் மாவட்ட எல்லையில் சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் மணிவண்ணன் வாங்கிச்சென்ற இ – பாஸை சோதனை செய்த காவல் துறையினருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.மணிவண்ணன் கொண்டு வந்தது போலி இ – பாஸ் என காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.மேலும்,காவல் துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையில் தான் வாங்கி வந்தது போலி இ – பாஸ் தான் என்பதையும்,கோவை சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே செயல்பட்டு வந்த சூலூர் ஜெராக்ஸ் கடையில் இருந்து வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக காவல் துறையினர் விருதுநகர் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.விரைந்து செயல்பட்ட கோவை மாவட்ட நிர்வாகத்தின் பேரில் வட்டாட்சியர் மீனா தலைமையிலான வருவாய்த்துறையினர் சூலூரில் செயல்பட்டு வந்த ஜெராக்ஸ் கடைக்கு அதிரடியாக பூட்டி ” சீல் ” வைத்தனர்.

மேலும், போலி இ – பாஸ் வழங்கியது குறித்து வருவாய்த்துறையினர் சார்பில் சூலூர் காவல் துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.காவல் துறையினரின் விசாரணையில் ஜெராக்ஸ் கடையின் உரிமையாளர் பாலு என்பதும்,அவர் தலைமறைவாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.போலீசார் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.மேலும்,இதுபோல் சட்டவிரோதமாக இ – பாஸ் வழங்கப்பட்டுள்ளதா ? என்ற கோணத்திலும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இ – பாஸ் பெறும் முறையை இன்னும் சற்று எளிமைப்படுத்த வேண்டும் எனவும்,இதுபோன்ற போலி இ – பாஸை கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் எல்லையிலே இதனை காவல் துறையினரும்,வருவாய்த்துறையினரும் சோதனை செய்திருந்தாலே மாவட்ட எல்லையிலே தடுத்து நிறுத்தி இருக்க முடியும்,அதை விடுத்து கோவை,திருப்பூர்,திண்டுக்கல்,மதுரை எல்லைகளை தாண்டி விருதுநகர் எல்லை வரை சென்றிருக்க முடியாது எனவும்,மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகி உள்ளதால் கொரோனா பரவ இதுவும் ஒரு காரணமாக அமையும்.
எனவே,மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பின் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






