கியூ ஆர் கோட் மூலம் திருமணத்திற்கு மொய் அனுப்பும் புதுமை!
உற்றார் உறவினர் கூடி பார்த்து வாழ்த்தி மகிழும் திருமணங்களைக் கொரொனா கால நிலையில் காணொளியிலேயே திருமண விழாவை பார்க்கும் புதுமை புகுந்துவிட்டது. மொய் கூட கியூ ஆர் கோட் ஸ்கேன் செய்து வழங்கிவிடும் தொழில்நுட்பம் வந்துள்ளது.
வாரணம் ஆயிரம் சூல வளம் செய்து பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோழிகள் கலகலக்கும் திருமண விழாக்களுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. ஆனால் சொந்த பந்தங்களை அழைக்காமல் தெரிவிக்காமல் திருமணம் நடத்த முடியுமா என்ன?
இதற்காகவே காணொளி திருமண அழைப்பிதழ்களை அறிமுகம் செய்துள்ளனர் கோவை டவுன்ஹாலில் உள்ள திருமணம் பத்திரிக்கை அச்சடிக்கும் நிறுவனங்கள். இந்த காணொளி அழைப்பிதழ்களை கொரியர் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம். இதில் முதல் பக்கத்தில் க்யூ ஆர் கோடு இருக்கும். அதனை ஸ்கேன் செய்தால் திருமண விழா குறித்த தகவல்கள் வீடியோவாக கிடைக்கும்.
அதை தொடர்ந்து நடுப்பக்கத்தில் இருக்கும் கியூ ஆர் கோட் ஐ திருமண நாள் அன்று முகூர்த்த நேரத்தில் ஸ்கேன் செய்தால் நேரலையாக திருமணத்தை பார்ப்பதுடன் மொய் கூட அனுப்பி விடலாம். நேரலையில் தவறவிட்டால் பதிவு செய்யப்பட்ட திருமண வீடியோவையும் பின்னர் பார்க்கலாம்.
முகூர்த்தம் அதிகமுள்ள மாதங்களில் 20 லட்சம் வரை திருமண பத்திரிக்கைகளை அச்சடிக்கும் நிலை மாறி 25, 50 பத்திரிக்கைகளை அச்சடிக்கும் நிலை ஏற்பட்டதால் அதனை மாற்ற இந்த புதுமை புகுத்தப்பட்டுள்ளது. கால மாற்றங்கள் சூழ்நிலைகள் மனித இயல்பை மாற்றி விடும் நிலையில் புதுமையான முயற்சிகளும் கடினமான உழைப்பும் அவற்றை வென்று விடும் என்கின்றனர் உரிமையாளர்கள்.






