புத்தாடை,இனிப்புகள் வழங்கி தூய்மைப்பணியாளர்களை கெளரவித்த எம்.எல்.ஏ ஆறுக்குட்டி !!!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்திலும் இதன் தாக்கம் சற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 771 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 324 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4829. சென்னையில் மட்டும். மொத்த பாதிப்பு 2328 பேர்.இதுமட்டுமல்லாமல் அரியலூர் 188 , கடலூர் 95, காஞ்சிபுரம் 45, திருவள்ளூர் 34, மதுரை 20, தி. மலை 17 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 3 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது.இதனால் மக்கள் பணிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.இதனை கருத்தில் கொண்டு மத்திய,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவம்,தூய்மைப்பணியாளர்கள்,காவல்துறையினரின் பங்கு அளப்பரியது.தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் உயிர் காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் சர்க்கார்சாமக்குளம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர்க்கு அவர்களை கெளரவிக்கும் விதமாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி புத்தாடைகள்,இனிப்பு களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் துவாரகநாத் சிங்,சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய சேர்மன் கவிதா சண்முகசுந்தரம்,தேவம்பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் தேவராஜ்,சர்க்கார்சாமக்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் உட்பட தூய்மைப்பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் தூய்மைப்பணியாளர்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.






