ஊரடங்கு உத்தரவு எதிரொலி : ராமநாதபுரம் நகரில் உணவின்றி தவிப்போருக்கு 5 நாட்களாக பசியாற்றும் தாய்ப்பாசம் அறக்கட்டளை அமைப்பு நிர்வாகிகள்!!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திடீரென பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவால் வெளியூர்வாசிகள், ஆஸ்பத்திரிகளில் உள்ள நோயாளிகளின் உறவினர்கள், சாலையோரம் வசிக்கும் ஏழைகள் மற்றும் ஆதரவற்றவர்கள் வயிற்றுக்கு உணவின்றி அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் நகரிலும் இது போன்று பலர் பரிதவிப்பதைக் கண்டு தாய்ப்பாசம் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் கருணை உள்ளத்துடன் உணவு சமைத்து வழங்கி வருகின்றனர்.

ராமநாதபுரம் நகரில் கடந்த ஐந்து நாட்களாக தாய்ப்பாசம் அறக்கட்டளை மூலம் அதன் நிறுவனர் பாதுஷா நூருல் சமது மற்றும் அறக்கட்டளையின் பொருளாளர் சீனி, ஸ்டார் டிபன் சென்டர் உணவக உரிமையாளர் ஆகியோர் இணைந்து உணவு தயார் செய்து மருத்துவமனை மற்றும் நகரில் பல்வேறு இடங்களில் உணவின்றி தவிக்கும் நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் தொடர்ச்சியாக வழங்கி அவர்களின் பசியை போக்கி வருவது பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.







