சட்ட சிக்கலில் விஜய்! * நள்ளிரவில் கடத்தப்பட்டாரா அமமுக எம்.எல்.ஏ? * குதிரை பேரம் உறுதியானால் 7 ஆண்டு சிறை.!
விஜய் முதல்வர் ஆவாரா இல்லையா என்று ஆர்வமுடன் காத்திருந்த தவெகவினருக்கு அடுத்த அதிர்ச்சியாக, டிடிவி தினகரன் கொடுத்துள்ள குதிரைபேர புகார் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஃபோர்ஜரி புகார் உறுதியானால் 7 ஆண்டு சிறை என்று சட்டம் சொல்லும் நிலையில், புதிய சிக்கலால் விஜய் விழிபிதுங்கி உள்ளார். சினிமாவை மிஞ்சும் வகையில்ல் நள்ளிரவில் அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் கடத்தப்பட்டடாக கூறப்படும் விவகாரத்தின் பின்னணியை பார்ப்போம்.
தமிழக அரசியலில் ‘பாக்ஸ் ஆபீஸ்’ வெற்றியைப் பெற்றுவிடலாம் என்று கணக்குப் போட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, ஆரம்பமே அதிரடி ஆக்ஷன் காட்சிகளாக அமைந்துவிட்டன. ஆனால், இந்தப் படத்தில் அவர் ஹீரோவா அல்லது சட்டச் சிக்கலில் சிக்கும் கைதியா என்கிற கேள்விதான் இப்போது கோட்டை வட்டாரத்தில் ஹாட் டாபிக். டிடிவி தினகரன் கொடுத்த ‘குதிரை பேரம்’ புகாரால், விழிபிதுங்கி நிற்கிறது தவெக தரப்பு.

மன்னார்குடி தொகுதியில் வென்ற அமமுக-வின் ஒற்றை எம்.எல்.ஏ-வான காமராஜ், புதுச்சேரி ஆரோவில் அருகே இருக்கும் டிடிவி தினகரனின் பங்களாவில் ரகசியமாகத் தங்க வைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்துதான் ஆரம்பமானது ஹைஜாக் ஆப்ரேஷன். சினிமாவை மிஞ்சும் வேகத்தில் தவெக தரப்பினர் ஒரு டீமாகச் சென்று, காமராஜை அங்கிருந்து அலாக்காகத் தூக்கி சென்னைக்கு காரில் ஏற்றி வந்ததாக சொல்கிறார்கள். காரில், வழியெங்கும் கட்டுக்கட்டாகப் பணத்தைக் காட்டிப் பேசியதாகச் சொல்லப்படும் விவகாரம், இப்போது “ஃபோர்ஜரி” வழக்காக விஜய் கழுத்தை நெரிக்கத் தொடங்கியுள்ளது.
“கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு ஆதரவு கடிதத்தில் கையெழுத்து போடுங்கள்” என்று அந்த ஓடும் காரிலேயே காமராஜிடம் டீல் பேசப்பட்டதாம். ஒரு கட்டத்தில் காமராஜ் கையெழுத்திட்ட அந்தப் பேப்பரை ஸ்கேன் செய்து தவெக தலைமைக்கு அனுப்பியிருக்கிறது அந்த டீம். அதைப் பார்த்த உற்சாகத்தில்தான், விஜய் வெள்ளிக்கிழமை மாலை ஆளுநர் அர்லேகரைச் சந்தித்து 121 எம்.எல்.ஏ-க்கள் தனக்கு ஆதரவு இருப்பதாக, தில்லாக ஒரு லிஸ்ட்டைக் கொடுத்தார். அந்த லிஸ்ட்டில் அமமுக எம்.எல்.ஏ-வின் பெயரும் இருந்ததுதான் இப்போது ஆளுநர் மாளிகையையே அதிர வைத்திருக்கிறது.

விஷயம் கேள்விப்பட்ட டிடிவி தினகரன் பதறியடித்துக்கொண்டு இரவு 10.00 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு ஓடினார். “என் எம்.எல்.ஏ கடத்தப்பட்டிருக்கிறார்… விஜய் கொடுத்த கடிதம் போலியானது. அவர் எடப்பாடி பழனிசாமிக்குத் தான் ஆதரவு கடிதம் கொடுத்தார்” என்று அவர் ஆளுநரிடம் முறையிட, விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. உடனே களமிறங்கிய ஆளுநர் மாளிகை, “எம்.எல்.ஏ-வை ஆஜர்படுத்தவில்லை என்றால் விளைவுகள் கடுமையாக இருக்கும்” என தவெக தரப்புக்கு அல்டிமேட் எச்சரிக்கை கொடுத்தது.
இதன்பின்னர், நள்ளிரவு 12 மணியைத் தாண்டிய வேளையில், போலீஸ் பாதுகாப்புடன் காமராஜ் ஆளுநர் மாளிகைக்கு அழைத்து வரப்பட்டார். “எனக்குத் தெரியாமல் என் பெயரில் வாட்ஸ்-அப்பில் பரப்பப்படும் கடிதம் போலியானது. நான் எடப்பாடியாருக்குத்தான் ஆதரவு” என்று காமராஜ் ஆளுநரிடம் எழுதித் தர, ஆட்டம் தலைகீழாக மாறியது. இந்தத் திடீர் திருப்பத்தால் ‘குதிரை பேரம்’ புகாரில் சிக்கியுள்ள தவெக தரப்புக்கு எதிராக கிண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
சட்ட வல்லுநர்கள் சொல்வதோ இன்னும் பயங்கரமாக இருக்கிறது. பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின்படி, ஒரு பொது அதிகாரியை (ஆளுநர்) ஏமாற்றிப் பதவி பெற முயல்வது 7 ஆண்டு சிறைத் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம். அதுவும் ஒரு குழுவாகச் சேர்ந்து சதி செய்ததாக (BNS 61) வழக்குத் திரும்பினால், அது விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கே பெரும் முட்டுக்கட்டையாகிவிடும்.

“ஆளுநர் மாளிகையின் கதவுகள் விஜய்க்குத் திறப்பதற்கே ஒரு வாரம் ஆகிறது, ஆனால் தினகரன் நினைத்த நேரத்தில் நள்ளிரவிலும் அங்கே நுழைகிறார் என்றால், பின்னணியில் பாஜக-வின் ‘ஸ்கெட்ச்’ வலுவாக இருக்கிறது” என்று தவெக-வினர் புலம்பித் தீர்க்கிறார்கள். பாஜக-வின் ஆசீர்வாதம் தினகரனுக்கு இருப்பதால் தான், ஆளுநர் இவ்வளவு வேகம் காட்டுகிறார் என்பது அவர்களின் வாதம். எனவே, தினகரன் கொடுத்துள்ள புகாரில் விஜய்க்கு சட்ட சிக்கலை ஏற்படுத்த ஆளுநர் திட்டமிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இது விஜய்க்கு ஏற்பட்டுள்ள புதிய தலைவலி.
ஒரு பக்கம் திருமாவளவனின் போக்கு காட்டும் போக்கு, இன்னொரு பக்கம் திமுக- அதிமுக கூட்டு சேர்ந்து தரும் அழுத்தம், இப்போது ஆளுநர் வழியாக பாஜக தரும் நெருக்கடி எனப் பலமுனைத் தாக்குதலில் விஜய் நிலைகுலைந்து போயிருக்கிறார். “முதல்வராவதற்கு முன்பே சிறைச் சாலைக்கு அஸ்திவாரம் போடப்படுகிறதா?” என்கிற கவலையில் தவெக நிர்வாகிகள் ஆழ்ந்துள்ளனர்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு, விஜய் தனது மவுனத்தை கலைக்க வேண்டும். குதிரை பேர புகாருக்கு அவர் பதில் அளிக்க வேண்டும் என்று அரசியல் ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். குதிரைபேர புகார் என்ற கத்தி தலைக்கு மேல் கட்டிவிடப்பட்டுள்ளது. இந்த சட்டச் சிக்கலில் இருந்து விஜய் எப்படி வெளியே வரப்போகிறார்? அவரது மவுனம் எப்போது கலையும்? பொறுத்திருந்து பார்ப்போம்!





