திருப்பூர் திமுகவில் சுனாமி! * தீவிர விசுவாசி செல்வராஜ் விலகலால் அதிர்ச்சி! * உழைத்தவர்களுக்கு மதிப்பில்லை என குமுறல்..!
திருப்பூர் திமுகவின் அசைக்க முடியாத அச்சாணியாகவும், தொண்டர்களின் பாசறைத் தலைவனாகவும் திகழ்ந்த முன்னாள் எம்எல்ஏ க. செல்வராஜ், ‘இனி திமுகவில் மதிப்பில்லை இடமில்லை’ என்று கண்ணீரோடு விடைபெற்றிருப்பது, திருப்பூர் மாவட்ட திமுகவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக உடன்பிறப்புகளின் அடிவயிற்றையும் கலங்கச் செய்துள்ளது.
தொண்டன் என்பவன் கிள்ளுக்கீரையா?
விடியல் தரும் என்று நம்பி வாக்களித்த திமுக தொண்டனின் நெஞ்சில், இப்போது எரிமலைக் குழம்பாய் கொதித்துக் கொண்டிருக்கிறது ஒரு கேள்வி. ஐம்பது ஆண்டுகாலம், கட்சிக்காக செங்குருதி சிந்தி, சிறைவாசம் கண்டு, கொடியேற்றி, முழக்கமிட்ட ஒரு தலைமுறைத் தலைவனுக்கு கிடைக்காத மரியாதை, நேற்று வந்த மாற்றுக்கட்சி ‘மன்னர்களுக்கு’ சிவப்புக் கம்பளம் விரித்து வழங்கப்படுகிறதே, இதுதான் நாம் வளர்த்த திமுகவா? என்பதுதான். செல்வராஜின் விலகல் என்பது வெறும் ஒரு தனிமனிதனின் விலகல் அல்ல; தொண்டனை கிள்ளுக்கீரையாக நினைக்கும் தலைமைக்கு விழுந்த பலத்த சாட்டையடி!
கடந்த 1976-ல், நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட அந்த இருண்ட காலத்தில், தொழிற்சங்கப் பணியில் தொடங்கி, நகரக் கழகச் செயலாளர், மேயர், மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் எனப் படிப்படியாக உழைப்பால் உயர்ந்தவர் செல்வராஜ். திருப்பூரில் திமுக என்கிற ஆலமரம் தழைத்து வளர்வதற்கு, தன் வாழ்நாளின் ஐம்பது ஆண்டுகளைத் தாரைவார்த்துக்கொடுத்த அந்த மூத்த தலைவன், இன்று மன அழுத்தத்தின் உச்சத்துக்கே தள்ளப்பட்டு, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே விலகுகிறேன் என்று அறிவித்திருப்பது, திமுக தன் அழிவுப்பாதையை நோக்கித் துரிதமாகப் பயணிக்கத் தொடங்கிவிட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

கட்சி தாவியவர்களுக்கு சிவப்புக் கம்பளம்!
பல்லாயிரக்கணக்கான தொண்டர்களைத் தன் பின்னால் வைத்திருக்கும் ஒரு மக்கள் தலைவனுக்கு ஏற்பட்ட இந்த கதி, நாளை நமக்கும் ஏற்படலாம் என்ற விரக்தியில், திருப்பூரின் அடிமட்டத் தொண்டர்கள் ஒட்டுமொத்தமாக உற்சாகமிழந்து, செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள்.
திமுகவுக்கு உழைத்தவர்களுக்கு மதிப்பில்லை; ஆனால், நேற்று வரை நம் தலைவரை மேடைகளில் தரம் தாழ்த்திப் பேசிவிட்டு, இன்று கட்சித் தாவியவர்களுக்கு அதிகார நாற்காலியா? என்ற செல்வராஜின் இந்த வேதனைக் குரல், தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் இருக்கும் உண்மைத் தொண்டனின் குமுறல்.
கடந்த ஆட்சியில் திமுகவின் அதிகார மையங்களாக வலம் வந்த அமைச்சர்களின் பட்டியலைத் திருப்பிப் பார்த்தாலே, இந்த திராவிடக் கோட்டையின் அடித்தளம் எப்படிப் பலவீனமடைந்து வருகிறது என்பது வெட்டவெளிச்சமாகும். விசுவாசமான தொண்டர்களை ஓரங்கட்டிவிட்டு, பழைய அதிமுக பாசறையில் வளர்ந்தவர்களுக்கே இன்று திமுகவில் ராஜமரியாதை வழங்கப்படுகிறது.
அழிவுப்பாதையை நோக்கி திமுக?
முன்னாள் அதிமுக பிரமுகரான செந்தில் பாலாஜிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமும் அதிகாரமும், காலம் காலமாய் கட்சிக்காக உழைத்த மூத்த தலைவர்களுக்குக் கனவிலும் கிடைப்பதில்லை. இதேபோல், ஜெயலலிதா அமைச்சரவையில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ராஜகண்ணப்பன், அதிமுகவின் தூண்களாக இருந்த சேகர்பாபு, ரகுபதி எனப் பலரும் இன்று திமுகவின் டாப்-7 அமைச்சர்களாக வலம் வந்தனர்.
இவர்களெல்லாம் ஒரு காலத்தில் திமுகவை ஒழிக்க சபதமேற்றவர்கள் இல்லையா? இவர்களுக்கெல்லாம் வாரி வாரிக் கொடுக்கும் தலைமை, ஐம்பதாண்டுகளாகக் கொடி பிடித்த செல்வராஜ்களை உதாசீனப்படுத்துவது எந்த ஊர் நியாயம்? மாற்றுக்கட்சியினருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு தரத் தொடங்கியபோதே, திமுக தன் சுயமரியாதையையும் கொள்கைப் பிடிப்பையும் இழந்து, அழிவுப்பாதைக்குச் செல்லத் தொடங்கிவிட்டது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
தொழிலதிபர் கொடுத்த நெருக்கடி!
செல்வராஜின் விலகலுக்குப் பின்னால் இருக்கும் ‘டாலர்’ அரசியல், திமுகவின் கார்ப்பரேட் கலாச்சாரத்தை அம்பலப்படுத்தியுள்ளது. திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட செல்வராஜ் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், ஒரு தொழிலதிபரின் அழுத்தத்திற்குப் பணிந்து, மாற்றுக்கட்சியிலிருந்து வந்த, அதுவும் மேயர் பதவியில் இருக்கும் தினேஷ் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பதுதான் செல்வராஜ் ஆதரவாளர்களின் குற்றச்சாட்டு.
பண பலமும், அதிகார பலமும் இருந்தால், ஐம்பதாண்டுகால உழைப்பை ஒரே நொடியில் துடைத்தெறிந்துவிடலாம் என்பதற்கு இதுவே சாட்சி. தலைமுறை தலைமுறையாகப் பதவிச் சுகத்தை மட்டுமே அனுபவித்து, ஏழைத் தொண்டனின் உழைப்பை உறிஞ்சி வாழும் திமுகவின் சில மூத்த தலைவர்களின் முகத்திரையை செல்வராஜ் கிழித்தெறிந்துள்ளார்.
ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார்; நெகிழும் செல்வராஜ்!
இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவே பல்லடத்தில் செல்வராஜை நிற்கச் சொன்னதாகக் கூறும் தலைமைக்கு, ‘ஏன் திருப்பூர் தெற்கில் அந்த இளைஞர் பாசம் வேலை செய்யவில்லை?’ என்று செல்வராஜ் கேட்ட கேள்வி, தலைமைக்கு விழுந்த மரண அடி. அதுமட்டுமன்றி, இஸ்லாமிய மக்களுக்கு கபர்ஸ்தான் நிலம் வழங்குவதைக் கூடத் தடுத்து நிறுத்தும் அளவிற்கு ஒரு தொழிலதிபரின் ஆதிக்கம் கட்சிக்குள் ஊடுருவியிருக்கிறது என்றால், திமுக இன்று யாருக்கான கட்சியாகச் செயல்படுகிறது? உழைத்த தொண்டனுக்கா அல்லது கார்ப்பரேட் முதலாளிகளுக்கா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் செல்வராஜ்.
“தளபதி ஸ்டாலின்தான் மீண்டும் முதல்வர் ஆவார்; அதற்கு நான் என்னைப் பலி கொடுத்துக் கொள்கிறேன்” என்று செல்வராஜ் கூறிய வார்த்தைகளில், தலைவன் மீது அவர் வைத்திருக்கும் மாறாத பற்றும், கட்சிக்குள் நடக்கும் அநீதியால் ஏற்பட்ட அசாத்திய ரணமும் ஒருசேர வெளிப்படுகிறது. வேறு எந்தக் கட்சிக்கும் போக மாட்டேன் என்று சூளுரைக்கும் இந்த உத்தமத் தொண்டனை இழந்தது, திருப்பூரை பொறுத்தாரை திமுகவுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அதிகார போதையிலும், பண மழையிலும் மிதக்கும் தலைமைக்கு இப்போது இது உறைக்காமல் இருக்கலாம். ஆனால், தேர்தல் களத்தில் வாக்குச் சாவடியில் நின்று, வெயிலிலும் மழையிலும் நமக்காக உழைக்கப் போவது டாலர் முதலாளிகளோ அல்லது நேற்று வந்த மாற்றுக்கட்சித் தலைவர்களோ அல்ல; செல்வராஜைப் போன்ற உண்மையான தொண்டர்கள்தான்.
உழைத்தவர்களை உதாசீனப்படுத்தி, அதிகார வர்க்கத்தின் கைகளில் தஞ்சம் புகுந்துள்ள திமுக, தன் தவற்றை உணர்ந்து திருத்திக் கொள்ளாவிட்டால், இந்தத் தொண்டர்களின் சாபமே அதன் வீழ்ச்சிக்கு முதற்புள்ளியாக மாறும் என்பதில் ஐயமில்லை.






