--- --:--:-- --

கோவையில் வெளிநாடுகளில் இருந்து வந்த 4484 பேர் வீடுகளில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் ..! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் !!!

e02dd680-e26f-41c9-abf3-6aa1f9c8e4bf

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,முன்னாள் எம்.பி.,ஏ.கே.செல்வராஜ்,சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.கே.சின்னராஜ்,பி.ஆர்.ஜி.அருண்குமார்,எட்டிமடை சண்முகம்,வி.பி.கந்தசாமி,கஸ்தூரி வாசு உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது,
கோவை மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.ஆர்.எஸ்.புரம் , வடவள்ளி உட்பட கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளிலும் பொது மக்கள் சமூக இடைவெளி விட்டு காய்கறிகள் வாங்கி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் அம்மா உணவகங்களில் 3 நேரமும் உணவகங்கள் செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

மேலும்,கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை கொரோனா சிகிச்சைக்காக பிரத்யேக மருத்துவமனையாக செயல்படுகின்றது எனவும்,இதுவரை 147 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளில் இருந்து வந்த 4484 பேர் அவர்களின் வீடுகளில் தனிமை படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.

மேலும்,கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக கோவை மாவட்டத்தில் உள்ள 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து 5 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளதாக கூறிய அவர், அதிமுக சார்பில் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் , மருந்துகள் இன்று கோவை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். அத்தியாவசிய பொருட்கள் கேரளா உட்பட அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பபட்டு வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

 

மேலும்,தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த இரட்டை ஊதியம் ஓப்பந்த தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவித்த அவர் இது போன்ற செயல்பாடுகளில் நிரந்தர பணியாளர், ஒப்பந்த பணியாளர் என வேறுபடுத்தி இந்த அரசு பார்க்காது எனவும் தெரிவித்தார்.

 

மேலும்,கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களை தடுத்து அங்குள்ள முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும், கால்நடைகளுக்கு தீவனங்கள் கிடைப்பதில் இனி தட்டுப்பாடு இருக்காது எனவும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து ஆலோசித்து பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

 

வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் இருக்காது எனவும்,ஏதேனும் பாதிப்பு இருந்தால் உடனடியாக கட்டுப்பாட்டு அறையை அவர்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். வட மாநில தொழிலாளர்களின் பிரச்சினையை மாவட்ட ஆட்சியர் விசாரித்து நடவடிக்கை எடுப்பார் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon