--- --:--:-- --

மகளிர் தினத்தில் இந்தியா மகுடம் சூடுமா..? பெண்கள் டி20 உலக கோப்பை பைனலில் ஆஸி.,யுடன் பலப்பரீட்சை!!

மகளிர் தினத்தில் இந்தியா மகுடம் சூடுமா..? பெண்கள் டி20 உலக கோப்பை பைனலில் ஆஸி.,யுடன் பலப்பரீட்சை!!

பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை போட்டியில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்கிறது.சர்வதேச மகளிர் தினத்தில் முதல்முறையாக இந்திய அணி மகுடம் சூடுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான 6-வது டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய பெண்கள் அணி லீக் சுற்றுப் போட்டிகளில் அபார திறமையை வெளிப்படுத்தி, விளையாடிய 4 போட்டிகளிலும் வாகை சூடி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்துடனான அரையிறுதிப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட, லீக் சுற்றில் தோல்வியே காணாமல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் அடிப்படையில், இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

 

இதனால் இன்று மெல்போர்னில் நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்திய பெண்கள் அணி டி20 இறுதிப் போட்டிக்கு நுழைவது இதுவே முதல் முறை. ஆனால் ஆஸ்திரேலியாவோ ஏற்கனவே 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி. இதனால் பலம் மிக்க அணியாக ஆஸ்திரேலிய அணி திகழ்கிறது. ஆனால் லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய தெம்பில் இந்திய பெண்கள் அணி களம் காண்கிறது.

 

இதனால் இன்றைய போட்டியில், கோப்பையை கைப்பற்ற இரு அணிகளுமே கடும் பலப்பரீட்சை நடத்தும் என்பதில் சந்தேகமில்லை. முதல் முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய பெண்கள் அணி, சர்வதேச மகளிர் தினமான இன்று கோப்பையை வென்று கெத்தாக மகுடம் சூடி பெருமை சேர்க்குமா ?என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கும் இன்று 31-வது பிறந்த தினம் என்பதும் மேலும் ஒரு சிறப்பான நாளாகும். இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு பிரதமர் மோடி யும் வாழ்த்து தெரிவித்துள்ளார். பெண்கள் தினத்தில் நடக்கும் இப்போட்டியில் இந்தியாவுக்கு இதைவிட பெரியது எதுவுமில்லை. இந்திய அணி சாதிக்க வாழ்த்துகிறேன் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon