தமிழகத்திலும் கொரானோ பாதிப்பு உறுதி..! ஓமனில் இருந்து வந்த தமிழருக்கு தீவிர சிகிச்சை!!
ஓமனில் இருந்து சென்னை வந்த தமிழர் ஒருவருக்கு கொரானோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவரை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளித்து வருவதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சீனாவை அலறவிட்டுள்ள கொரானோ வைரஸ் உலக நாடுகள் பலவற்றையும் இப்போது அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது.சீனாவில் 3000-த்திற்கும் அதிகமானோர் பலியான நிலையில், ஈரானில் 150 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தென் கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளிலும் இதன் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.
தற்போது இந்தியாவிலும் கொரானோ பாதிப்பு கண்டறியப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் சொந்த நாடு திரும்பும் இந்தியர்கள் அனைவரும் விமான நிலையங்களில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.இந்தியாவில் இதுவரை 34 பேருக்கு கொரானோ பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் யாருக்கும் கொரானோ பாதிப்பு இல்லை என்றும், வெளிநாடுகளில் இருந்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் வரும் பயணிகள் அனைவரும் தீவிர பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டிலும் ஒருவருக்கு கொரானோ பாதிப்பு இருப்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன் ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து சென்னை திரும்பிய 45 வயது தமிழர் ஒருவருக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு, அவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரானோ அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு உடல் நிலை சீராக உள்ளதாகவும், எனவே கொரானோ பற்றி யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




