பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாட அதிமுகவுக்கு என்ன அருகதை..? மு.க.ஸ்டாலின் கேள்வி!!
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்ட நிலையில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாட அதிமுகவுக்கு அருகதையில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், திமுகவில் இணையும் பிரமாண்ட விழாப் பொதுக் கூட்டம் மதுரை அருகே ஒத்தக்கடையில் இன்று நடைபெற்றது.இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ராஜகண்ணப்பனும் அவருடைய ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்தனர். இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், பாலியல் துன்புறுத்தல்களும் அதிகரித்து விட்டன. அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்து சென்னையில் இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார்.கோவையிலோ அனுராதா என்ற பெண் காயமடைந்து காலை இழக்க நேரிட்டது.
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டனர். இப்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் என கொண்டாட அதிமுகவுக்கு அருகதையில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொள்ளாச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து விட்டது. ஜெயலலிதா ஆட்சியை விட எடப்பாடி ஆட்சியில் தமிழகத்தின் நிதிநிலைமை கோமா நிலைக்கு சென்று விட்டது. கடந்த 3 ஆண்டில் மட்டும் 2 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக கடன் சுமை ஏறியுள்ளதுதான் எடப்பாடி பழனிசாமி அரசின் வேதனையான சாதனை என மு.க.ஸ்டாலின் பேசினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




