திமுகவில் மீண்டும் இணைந்தார் ராஜகண்ணப்பன்..!மதுரையில் நடந்த பிரமாண்ட இணைப்பு விழா!!
முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார். மதுரையில் மாநாடு போல் நடந்த இணைப்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ராஜகண்ணப்பன் திமுகவில் இணைந்தார்.
ஜெயலலிதா முதன்முதலில் 1991-ல் முதல்வரானபோது பொதுப்பணித் துறை, மின்சாரம், நெடுஞ்சாலை என முக்கிய இலாகாக்களுக்கு அமைச்சராக வலம் வந்தவர் கண்ணப்பன். இதனால் அதிமுகவிலும் இவருக்கு கூடுதல் முக்கியத்துவம் இருந்தது. ஜெயலலிதாவிடமும் நல்ல செல்வாக்குடன் திகழ்ந்தார்.
ஆனால், ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2001-ல் மக்கள் தமிழ் தேசம் என்ற தனிக் கட்சி தொடங்கினார். அதே ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி கண்டார். ஆனால் படுதோல்வியே பரிசாக கிடைத்தது. பின்னர் மக்கள் தமிழ் தேசம் கட்சியை கலைத்து விட்டு திமுக விலேயே இணைந்தார்.
2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்த ராஜ கண்ணப்பன், அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நப்பாசையில் இருந்தார். ஆனால் அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் ராஜகண்ணப்பன் இருந்ததை அறிந்து அதிமுக தரப்பில் இருந்து தூது விடப்பட்டது. இதனால் 2009-ல் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜெயலலிதா முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் சரணாகதி அடைந்தார்.

2009-ல் நடந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்ட ராஜ கண்ணப்பண், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். அந்தத் தேர்தலில் இவர்தான் வெற்றி பெற்றார் என்றும் ஆனால், ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக முடிவையே கோல்மால் செய்து விட்டதாகக் கூட சர்ச்சை எழுந்தது.
அதன் பின்னர் அதிமுகவில் முக்கியத்துவம் இன்றி டம்மியாகவே வலம் வந்த ராஜ கண்ணப்பன், ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது ஓபிஎஸ் அணியில் ஐக்கியமானார். ஆனால் ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் மீண்டும் இணைய ராஜகண்ணப்பன் வெறுத்துப் போனார். அதிமுகவில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
கடந்தாண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட அதிமுகவில் வாய்ப்பு கேட்டார். கிடைக்காததால் மீண்டும் தமது மக்கள் தமிழ் தேசம் கட்சியை தூசி தட்டிய ராஜ கண்ணப்பன் தனது ஆதரவாளர்களை ஒன்று திரட்டினார். அந்தத் தேர்தலில் திமுகவுக்கு தமது ஆதரவைத் தெரிவித்தார்.
இதனால் கடந்த ஓராண்டாகவே ராஜகண்ணப்பன் திமுகவில் இணையப் போவதாக செய்திகள் பரவி வந்தன. ஆனால் ராஜகண்ணப்பனோ தாம் திமுகவில் இணையும் நிகழ்வை மாநாடு போல் நடத்த திட்டம் போட்டார்.
அதன்படியே, இன்று மதுரை அருகே ஒத்தக்கடையில் பிரமாண்டமாக இணைப்பு விழா நடைபெற்றது. மாநாடு போன்றே நடந்த இந்த விழாவில் தமது ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் உடன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ராஜகண்ணப்பன் இணைந்தார். இந்த விழாவில் அதிமுக, தேமுதிக என வேறு கட்சிகளைச் சேர்ந்த பலரும் திமுகவில் இணைந்ததும் குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




