--- --:--:-- --

ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வளைய சூரியகிரகணத்தை விஷேச கண்ணாடியுடன் பார்த்த மாணவர்கள்!மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் பங்கேற்பு

01

சூரியகிரகணம் அமாவாசை நாளிலும், சந்திரகிரகணம் பெளர்ணமி அன்றும் நிகழும். சூரியகிரகணத்தின்போது சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைத்துவிட்டால் அது முழுசூரியகிரகணம். சூரியன் சந்திரனின் நிழலால் ஒருபகுதி சூரியனை மட்டும் மறைத்தால் அது பகுதிசூரியகிரகணம். சந்திரன் பூமியை நீள்வட்டத்தில் சுற்றி வருகிறது. அப்போது சிலசமயம் அருகிலும், சிலசமயம் தொலைவிலும் இருக்கும்.

 

வளையசூரியகிரகணம் என்பது சந்திரன் தூரத்தில் இருக்கும்போது சந்திரனின் நிழல், சூரியனின் வட்டத்திற்குள் விழுந்து சூரியனை முழுமையாக மறைக்காமல் சூரியன் நெருப்பு வளையமாக தெரிந்தால் அது வளைய சூரியகிரகணம் என்று அழைக்கப்படுகிறது. கேரளாவில் காசர்கோடு மாவட்டம் செகாவத்து என்ற ஊரில் நேற்று காலை 8.07 மணிக்கு தொடங்கி தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை என 9 மாவட்டங்களில் வளைய சூரியகிரகணம் பொன்னிறமாக தெரிந்து காலை 11.14 மணிக்கு முடிந்தது.

 

திருப்பூர் மாவட்ட அறிவியல் வள மையமான ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வளைய சூரியகிரகணத்தை பாதுகாப்புடன் பார்க்கும் நிகழ்ச்சிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதற்காக பள்ளி மைதானத்தில் வளைய சூரியகிரகணம் எவ்வாறு நடைபெறுகிறது குறித்து பெரிய அளவில் வண்ண வண்ண கலர் பொடிகளில் கோலமாக போடப்பட்டு இருந்தது. மேலும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஷேச கண்ணாடிகள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்டு இருந்தது.

 

நிகழ்ச்சிக்கு கொங்கு பள்ளி தலைவர் ஏ.கே.சி. தியாகராஜன் தலைமை தாங்கினார். பள்ளி பொருளாளர் சந்திரசேகர், நிர்வாகக்குழு உறுப்பினர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். பெங்களூர் ஐஸ்கோப் நிறுவன இயக்குனர் ஆர். பாலமோகன் வான்வெளியில் நிலாவில் நிகழும் அறிய நிகழ்வுகள், நிலவின் மேல்பகுதி மற்றும் சூரியகிரகணத்தை எவ்வாறு பாதுகாப்புடன் பார்ப்பது குறித்து விளக்கி கூறினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது : நான் சிறுவயதில் இருக்கும்போது சூரியகிரகணம் தெரிந்தபோது இதனால் பாதிப்பு ஏற்படும் என்று வைக்கோல் போரை வைத்து கட்டி பாதுகாப்பாக மக்கள் அனைத்து வேலைகளையும் செய்தனர். ஆனால இன்று திருப்பூர் மாவட்டத்திலேயே புதுமையாக, முதன்முதலாக பெங்களூர் ஐஸ்கோப் நிறுவனத்துடன் இணைந்து ஊத்துக்குளி கொங்கு பள்ளியில் சூரிய கிரகணத்தை பார்க்க 2 ஆயிரம் விஷேச கண்ணாடிகள் கொடுத்ததுடன் அற்புதமாக அதுகுறித்து விளக்கி மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி செய்ததற்கு பள்ளி நிர்வாகத்தை பாராட்டுகிறேன். என்றார்.

 

பின்னர் மாணவ மாணவிகளுடன் விஷேச கண்ணாடி அணிந்து சூரியனை பார்த்தார். தொடர்ந்து மாணவ மாணவிகள் பொதுமக்களுடன் முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் மற்றும் பள்ளி நிர்வாகிகளும் தொலைநோக்கிகள்,பைனாகுலர்கள் மூலமும் பார்த்தனர். மேலும் அனைவருக்கும் வீடியோ காட்சி மூலமும் நேரடி சூரியகிரகண காட்சிகள் காண்பிக்கப்பட்டது. முடிவில் பள்ளி செயலாளர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.

 

முன்னதாக ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் 52 பேர், மற்றும் 8 ஆசிரியர்கள் 2 நாள் அறிவியல் கள பயணமாக கொடைக்கானலில் உள்ள சூரிய வான் ஆய்வகத்தை பார்வையிட்டு வந்தனர்.

Leave a Reply

Right Menu Icon