மக்களிடம் கடும் கோபமும் வேதனையும் உள்ளது!
பாஜக தலைமையிலான மத்திய அரசையும் தேர்தல் ஆணையத்தையும் கடுமையாக விமரிசித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்த வார இறுதியில் “இந்திய ஜனநாயகத்தை நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழுவினர் பாழாக்குவதற்கு” எதிராக ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
மக்களிடையே மிகப்பெரிய கோபமும், மிகுந்த மன வேதனையும் நிலவி வருவதாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, ஞாயிற்றுக்கிழமை ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தவுள்ள பேரணியில் பொதுமக்கள் கலந்துகொள்வதைத் தடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். எனினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக, இதற்கான ஆதாரங்களை எதிர்க்கட்சித் தலைவர் காட்ட வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
தலைநகரில் பெய்த மழை காரணமாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடைபெறவிருந்த “பொதுமக்கள் விசரணை/பதவி நீக்க” நிகழ்வு சனிக்கிழமை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மிண்டோ சாலை – கனாட் பிளேஸ் பகுதியில் இருந்து ராம்லீலா மைதானம் வரை எதிர்க்கட்சித் தலைவர்கள் பேரணியாகச் செல்லவுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் புது டெல்லி இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, டெல்லி பேரணியில் மக்கள் பங்கேற்பதைத் தடுக்க உள்துறை அமைச்சர் தீவிரமாக முயல்வதாகக் குற்றம் சாட்டினார். இந்த நிகழ்வுக்காக உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்களையும் பொதுமக்களையும் திரட்டும் பணிகளில் காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.
“உள்துறை அமைச்சர் மக்கள் டெல்லிக்கு வருவதைத் தடுக்கத் தன்னால் இயன்ற வரை முயல்கிறார்; உபி, பீகார், எம்பி, ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து வர விரும்பும் எங்களது கட்சி உறுப்பினர்களையும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களையும் தடுக்க முயற்சிகள் நடக்கின்றன,” என்று ராகுல் காந்தி கூறினார்.
அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசிய அவர், “ஞாயிற்றுக்கிழமை ராம்லீலா மைதானத்தில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள். போராட்டத்தில் பங்கேற்க விரும்பும் அனைவரும் இந்தப் பேரணியிலும் கூட்டத்திலும் கலந்துகொள்ள வரவேற்கப்படுகிறார்கள்,” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “எத்தனை பேர் வருகிறார்கள், அவர்களைத் தடுக்க எவ்வளவு முயல்கிறார்கள் என்பதைப் பார்த்தாலே நாட்டில் என்ன நடக்கிறது என்பது புரியும். கவுதம் அதானி, முகேஷ் அம்பானி, நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோருக்கு உதவுவதற்காக லட்சக்கணக்கான மக்களின் வாக்குகள் பறிக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்படுவதால் மக்களிடையே பெரும் கோபமும் வேதனையும் நிலவுகிறது. இங்கு பல போராட்டங்கள் நடக்கவில்லை; இது ஒரே போராட்டம்தான். முழு எதிர்க்கட்சியும் இங்கு ஒன்றாக நிற்கிறது. போராட விரும்பும் யார் வேண்டுமானாலும் வரலாம். இந்திய அரசியலமைப்பு, இந்தியத் தன்மை மற்றும் அனைத்து இந்தியர்களின் குரலான வாக்கு உரிமையைப் பாதுகாக்கவே நாங்கள் அனைவரும் ஒன்றாக நிற்கிறோம்,” என்று விவரித்தார்.
டெல்லி பேரணிக்கு அதிக அளவிலான தொண்டர்களைத் திரட்டுவதற்காகப் பிரியங்கா காந்தி வத்ரா, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கடந்த சில நாட்களாக மாநிலத் தலைவர்களுடன் தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலைவர்களுக்கும் பெரிய அளவிலான தொண்டர் திரட்டல் இலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச காங்கிரஸ் அமைப்புகளிடையே தொண்டர்களைத் திரட்டுவதில் ஆரோக்கியமான போட்டி நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பித் பாத்ரா, “யார் தடுக்கப்பட்டார்கள்? யாரை யார் எங்கே தடுத்தார்கள்? இதற்கான ஆதாரத்தைக் காட்டுங்கள்,” என்று சவால் விடுத்துள்ளார். இந்தச் செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி, கார்கே ஆகியோருடன் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் டெரெக் ஓ பிரையன், சமாஜ்வாதி கட்சியின் தர்மேந்திர யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜான் பிாிட்டாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பி. சந்தோஷ் குமார், சிவசேனா (உத்தவ் பாலாசாஹெப் தாக்கரே) கட்சியின் அரவிந்த் சாவந்த், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சஞ்சய் யாதவ், புரட்சிகர சோசலிசக் கட்சியின் என். கே. பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் தர்மேந்திர யாதவ், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் வாக்காளர் பட்டியல் வரை அனைத்தும் முறைகேடு செய்யப்படுகின்றன. சமீபத்தில் நடந்த உத்தரப் பிரதேச சட்ட மேலவை தேர்தல் முடிவுகள் மூலம் ஆசிரியர்களும் பட்டதாரிகளும் பாஜக எந்த அளவுக்குப் பின்தங்கியுள்ளது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்,” என்றார். திரிணமூல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையன் பேசுகையில், “குடிமைச் சமூகம், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் என நாம் அனைவரும் இதில் ஒன்றாக இணைந்துள்ளோம்,” என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




